பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நடுவு நிலைமை

குதிஎன ஒன்று நன்றே, பகுதியால்
பால்பட் டொழுகப் பெறின்.

இ-ள்:- தகுதி என ஒன்று நன்றே - நடுவுநிலைமை யென்று சொல்லப் படுகின்ற ஒன்று நல்லதே, பகுதியால் பால்பட்டு ஒழுகப் பெறின் - அவரவர் பகுதி நிலைமையோடே (அறத்தின்) பால்பட்டு ஒழுகப்பெறுமாயின்.

[ஆல் என்பது உடனிகழ்ச்சியில் வந்தது.]

இஃது, அவரவர் பகுதிநிலைமையோடும் அறத்தோடும் பொருந்தச் செய்தலே தகுதியா மென்றது. ௧௧௩.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம், பேணிப்
பிறவும் தமபோல் செயின்.

இ-ள்:- வாணிகம் செய்வார்க்கு வாணிகம் - வாணிகம் செய்வார்க்கு வாணிகம் ஆம், பிறவும் தம போல் பேணி செயின் - பிறர் பொருள்களையும் தமது பொருள்கள் போலப் பேணிச் செய்வாராயின். [ஆம் - பலிக்கும்.]

இது, வாணிகம் செய்வார் பிறர் பொருளையும் தம் பொருள் போலப் பேணவேண்டு மென்றது. ௧௧௪.

கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

இ-ள்:- கேடும் பெருக்கமும் இல் அல்ல - கேடு வருதலும் ஆக்கம் வருதலும் (உலகத்து) இல்லை யல்ல; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி - (அவ்விரண்டி னுள்ளும் யாதானும் ஒன்று வந்த காலத்துத் தம்) நெஞ்சு கோடாம லொழுகல் சான்றோர்க்கு அழகாம்.

இது, தாம் கேடுற்ற இடத்தும் தம் நெஞ்சம் கோடாமல் ஒழுகல் வேண்டு மென்றது. ௧௧௫.

௪௩