பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலான் மறுத்தல்

ன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?

இ-ள்:- தன் ஊன் பெருக்கற்கு-தன்னுடம்பை வளர்த்தற்கு, தான் பிறிது ஊன் உண்பான்- தான் பிறிதொன்றினது உடம்பை உண்ணுமவன், எங்ஙனம் அருள் ஆளும்-எவ்வாறு அருளினை ஆள்வான்?

ஊனுண்ண அருள் கெடுமோ என்றார்க்கு, இது கூறப்பட்டது. ௧௧௩.

டைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றின்
உடல்சுவை உண்டார் மனம்.

இ-ள்:- படைகொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது-ஆயுதம் கைக்கொண்டவர்கள் நெஞ்சுபோல் நன்மையை நினையாது, ஒன்றின் உடல் சுவை உண்டார் மனம்-ஓன்றின் உடலைச் சுவைபட உண்டார் மனம்.

இஃது, ஊனுண்பார் நெஞ்சம் அறத்தை நினையா தென்றது. ௧௧௪.

தினற்பொருட்டால் கொள்ளா துலகெனின், யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.

இ-ள்:- தினல் பொருட்டு உலகு கொள்ளாது எனின்-தின்னுதற்காக உலகத்தார் கொள்ளார்களாகில், விலை பொருட்டு ஊன் தருவார் யாரும் இல்-விலைக்காக ஊன் விற்பார் யாரும் இல்லையாம். [ஆல் இரண்டும் அசை.]

கொன்று தின்னாது, விலைக்குக் கொண்டு தின்பார்க்குக் குற்றமென்னை யென்றார்க்கு, அதனானும் கொலைப்பாகம் வருமென்று இது கூறிற்று. ௧௧௫.

ருளல்ல தியாதெனின் கொல்லாமை கோறல்;
பொருளல்ல தவ்வூன் தினல்.

௬௭