பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அருளுடைமை

இ-ள்:- அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை-அருளை உடையார்க்கு அல்லல் இல்லை; கரி வளி வழங்கும் மல்லல் மா ஞாலம்-(அதற்குச்) சான்று காற்று இயங்கும் வளப்பத்தினையுடைய பெரிய உலகம்.

[அல்லல்-துன்பம். உலகம்-உலகத்தார்-பெரியோர்.]

அருளுடையார்க்கு அல்லலின்மை உலகத்தார் மாட்டே காணப்படுமென்று இது கூறிற்று, ௨௪௫.

ருளில்லார்க் கவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு.

இ-ள்:- அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை-அருள் இல்லாதார்க்கு மேலுலகம் (கூறும் காட்சி) இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல் ஆகிய ஆங்கு-பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின் கண் (நுகரும் நுகர்ச்சி) இல்லையானாற் போல.

இஃது, அருளில்லாதார் சுவர்க்கம் புகா ரென்றது. ௨௪௬.

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.

இ-ள்:- தேரின்-ஆராயின், அருளாதான் செய்யும் அறம்-அருளில்லாதவன் செய்யும் அறம், தெருளாதான் மெய்ப்பொருள் கண்டால் அற்று-தெருளாதான் மெய்ப்பொருளைத் தெளிந்தாற் போலும்.

இஃது, அருளில்லாதார் அறம் செய்யவும் மாட்டா ரென்றது. ௨௪௭.

பொருணீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருணீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

௮௯

12