பக்கம்:திருவாசகத்தேன்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 95

என்று திருமுறைகள் கூறும். ஆணவம் இருளினும் கொடியது. காரணம் இருள், தன்னைக் காட்டும்; காணக்கூடிய பொருளை மறைக்கும். ஆணவம், தன்னையும் காட்டாது; தன் செயலையும் காட்டாது. ஆணவச் சார்பினால் ஆன்மாவுக்கு அறிவு இல்லாமல் போகிறது; விருப்பமும் இல்லை; செயலும் இல்லை.

ஆன்மா, இனங்கண்டு கொள்ள இயலாமல் ஒடுங்கிக் கிடக்கும்; முடங்கிக் கிடக்கும். ஆன்மாவுக்கு இது கேவலம். அதனால் ஆணவத்துடன் கட்டுண்டு கிடக்கும் ஆன்மாவின் நிலைமையை கேவலாவத்தை என்று மெய்கண்ட நூல்கள் கூறும்.

இந்த நிலையில் சிவன் எம்பிரான் கருணையால் ஆன்மா, மாயையிலிருந்து உடலையும் உலகையும் பெற்று வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகிறது. ஆணவத்தின் ஆதிக்கத்திலிருந்து ஆன்மாவை மீட்க சிவன்—— பரம்பொருள் மாயை, கன்மம் என்று இரண்டு கூடுதல் மலங்களைச் சேர்க்கிறான். அதாவது அழுக்குத் துணியை வெளுக்க உவர் மண்ணைச் சேர்ப்பதைப்போல்! மாயை கன்மங்கள் உபசார வழக்காலேயே மலம் என்று கூறப்படுகிறது. மாயை, கன்மம் என்ற மலங்களுடன் சேர்க்கை கிடைத்தவுடன் ஆன்மாவுக்கு விருப்பம், ஞானம், செயல் ஆகிய மூன்றும் அமையும். இந்த நிலைகள் மாறிமாறி வந்து பொருந்தும். இந்த நிலையில் ஆன்மா, அறிவும் தெளிவும் இல்லாமல் நிலையில்லாதவற்றை நிலையாயின போலவும் நிலையானவற்றை நிலையில்லாதன போலவும் எண்ணும். நல்லன தீயனவாகும். தீயன நல்லனவாகும். இது மயக்க நிலை. ஒரு மலமாகிய ஆணவத்துடன் கூட்டுநிலை இருள்மல நிலை. மாயை, கன்யம், ஆணவம் ஆகிய மும்மலத்துடன் கூட்டு நிலை மருள் நிலை. இந்த நிலைமைகளிலிருந்து ஆன்மா பூரண அறிவுப் பொலிவுடன் விடுதலை அடைய வேண்டும்.