பக்கம்:திருவாசகத்தேன்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

அதாவது இறவாத இன்ப அன்பு நிலையை அடைதல் வேண்டும். இந்த நிலை அருள்நிலை.

கருமம்—— வினைத் தொடர்பு ஆன்மாக்களுக்குக் கிடைத்த பிறகே ஆன்மாக்கள் பிறவி எடுக்கின்றன. அவரவர் செயலுக்கு ஏற்ற பயனைத் துய்க்குமாறு செய்தல் நியதி. துய்த்தலினால் ஆன்மாவின் மலங்கள் கரையும்; மலங்கள் செயலிழக்கும். ஆனால் துய்க்கும் பொழுதும் 'நான்', 'எனது' என்ற உணர்வுடன் துய்த்தால் பற்றின் காரணமாக, மலங்களின் பிடி இருக்கும். இதனால் செத்துப் பிறத்தல் தொடரும். செய்யும் வினைகள் மட்டுமே பிறப்பிற்கு வித்தாகா.செய்யும் செயல்களின் நோக்கமே காரணமாக அமையும். இங்ஙனம் மும்மலம் என்று பேசுவது பெரு வழக்கு. மாணிக்கவாசகர் "ஐம்மலங்களிற் கிடந்துழல்வேன்" என்கிறார்.

மாயை, சுத்த மாயை என்றும், அசுத்த மாயை என்றும் இருவகைப்படும். அசுத்த மாயையின் காரியம் மாமேயம் எனப்படும். மாமேயம், கால தத்துவம் முதல் நிலம் ஈறாக உள்ள தத்துவங்களும் உலகங்களும் உலகத்துப் பொருள்களும் இவற்றால் வரும் போகமும் ஆகும். திரோதானம் ஐந்தாவது மலம். சிவசக்தியே திரோதான சக்தியாகத் தொழிற்படுகிறது. திரோதான சக்தியே (மறைக்கும் ஆற்றல்) ஆன்மாவுக்கு மலங்களின் செயற்பாட்டை பக்குவப்படுத்தி உய்திச் சாதனைகள் (மலப்ரிபாகம்) ஏற்புடத் துணை செய்கிறது. இதுவும் மலம் என்று உபசாரமாகக் கூறப்பெறும். இவ்வைந்து மலங்களும் உயிர்களை- ஆன்மாக்களைப் பொருந்தி இயக்குகின்றன. இந்த நிலையில் ஆசைகள், விருப்பு வெறுப்புக்கள், இன்பங்கள் துன்பங்கள் ஆகியவற்றில் உழலும் நிலையை "ஐந்து மலங்களில் கிடந்து, உழல்வேன்" என்றார்.