பக்கம்:திருவாசகத்தேன்.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இறைவன்—— சிவன் அப்படியல்ல. இறைவன்——'சிவபெருமான் தனக்கென ஒன்றும் வேண்டாதவன். குறியொன்றும் இல்லாத கூத்தன்! இறைவன் திருநீறு பூசி விளங்குவதுகூடத் தம்மை வழிபடும் அடியார்களின் வினை நீங்குவதற்குத்தான்! குழந்தைகளின் நோய்க்குத் தாயே மருந்துண்பாள்; பத்தியம் பிடிப்பாள்! அதுபோல இறைவன்—— சிவபெருமான் 'ஆன்மாக்களின் நலனுக் காகவே ஐந்தொழில் நிகழ்த்துபவன். ஆன்மாக்களின் கருத்தறிந்து முடிப்பவன்; வேண்ட முழுதும் தருபவன்; உய்வார்கள் உய்யும் வகையில் ஆட்கொண்டருளிச் செய்பவன்; பொன்னும் மெய்ப்பொருளும் தருபவன்; துய்ப்பனவெல்லாம் தந்தருள்பவன்; உய்யும் நெறியில் உய்ப்பன தந்தருளித் தாயிற் சிறந்த தயாவுடன் தொடர்ந்து நின்று காத்தருள்பவன். அதனால் சிவனே தலைவன்; தனித்துணை! சிவபெருமானைத் தலைவனாகப் பெறுதல் தவத்தின் ஆக்கம்; பயன்! அதனால் அடியார்கள் சிவபிரானை 'உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்' என்று பெருமிதத்துடன் கூறுகின்றனர். சிவபெருமானைப் பிரானாக—— தலைவனாகப் பெறுவதை விட ஆன்மாக்களுக்கு வேறு பேறு ஏது? அதனாலன்றோ "எங்கெழில் என் ஞாயிறு?" என்றும், "வானம் துளங்கிலென்? மண் கம்பமாகிலென்?" என்றும் பாடுகின்றனர். அப்பரடிகள், "இறுமாந்திருப்பதென்று கொலோ?" என்றே பாடுவார்.

சிவநெறியின் சிறப்பு, சிவபெருமானுக்குப் புகழ் சேர்ப்பது மட்டுமல்ல, சிவனடியார்களுக்குப் புகழ் சேர்ப்பதே இறைவன்—— சிவபெருமானின் திருவுள்ளம்! சிவனடியார்களைச் சிவன் எனவே தெளிந்துணர்ந்து வழிபாடு செய்யுமாறு சாத்திர நூல்கள் அறிமுகப் படுத்துகின்றன. ஆதலால் சிவபிரானைத் தேடுவதற்குப் பதில் சிவனடியாரைத் தேடலாம். இது எளிதும் கூட.