பக்கம்:திருவாசகத்தேன்.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 109

உண்டு அமரர்களுக்கு அருள் செய்தனன். இதுவே புகழுதற்குரிய சாதனை.

"விண்ணோர்கள் அமுதுண்டும் சாவ ஒருவரும்
உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்த"தால்

சிவன் புகழ் விண்ணையும் மண்ணையும் தழிஇய புகழாயிற்று. நீலகண்டம் பெற்றமையின் எவ்வுயிர்க்கும தலைவன் ஆனான், ஈசன் ஆனான்.

இறைவனுக்கு—— சிவபெருமானுக்கு மூன்று கண்கள். அவை முறையே ஞாயிறு, திங்கள், தீ. இந்த மூன்று கண்களில் தீ ஒரோவழி கட்புலனுக்கு வருவது. ஆயினும் பயன்பாடு மிகுதியுடையது. தீ, நெற்றிக்கண் அறிவுக்கண். தீ, தூய்மையற்றனவற்றையெல்லாம் அழிக்கும். ஆனால் தீ ஒருபொழுதும் அழுக்காவது இல்லை. அறிவு அறியாமையை அகற்றும்.

சிவம் —— சக்தி பொருளும் ஆற்றலும் போல, நெருப்பும் சூடும் போலப் பிரிக்க ஒண்ணாதது. உலகுயிர்களுக்கு உள்ள வேட்கை, துய்த்தாலொழிய நீங்காது. வேட்கை நீங்கினாலே விடுதலை, துய்த்தலுக்குரிய விருப்ப உணர்வைத் தருபவள் அன்னை பராசக்திதான். அதனாலேயே அன்னை பராசக்தி தன் கையில் கரும்பை ஏந்தி யிருக்கிறாள். அன்னை பராசக்திக்கு காமாட்சி என்று திருநாமமும் வந்தது. இறைவன் சிவன்——உலகுயிர்கள் எல்லாம் போகம் துய்த்து அவ்வழி நிறைநலம் எய்துதல் வேண்டும் என்ற திருவுள்ளக் குறிப்பினாலேயே அம்மையப்பனாக—— போகத் திருமேனியுடையவனாக இருக்கின்றான். இப்புவியில் வாழும் மாந்தரும் விலங்கு முதலிய சிற்றுயிர்களும் ஆண்——-பெண் என்று காதலில் கூடி இன்புற்று வாழ்கின்றனர். இவ்வின்ப வாழ்க்கைக்குத், தூண்டுவதே சிவபெருமானின் திருவுள்ளம்! அன்னையாகிய சிவையின்பால் நோக்குதலே மணம்!