பக்கம்:திருவாசகத்தேன்.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 111

என்று போற்றுகிறது. திருமுறைகள் முழுதும் "பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்த கோலமே" போற்றிப் புகழ்ந்து பேசப்படுகிறது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்ற திருக்குறளில் ஆதி என்பது சக்தியைக் குறிக்கும் சொல். சக்தியைப் பாகத்தில் உடையது பரம்பொருள் என்று இதற்கு ஒரு சைவ மரபு உரை உண்டு. சிவபெருமானை அம்மையப்பனாகவே சிந்தனை செய்தல் வேண்டும், வழிபடுதல் வேண்டும் என்ற மரபு வழி வழி பின்பற்றப்படுகிறது. சிவபெருமானும் அருளிச் செயல் நிகழும் போதெல்லாம் பெண் சுமந்த பாகத்தனாகவே எழுந்தருளி அருள்பாலித்துள்ளான். 'பெண் சுமந்த பாகத்தன்' என்று போற்றுவது உலகியல்; தமிழ் மரபு.

தமிழகத்தில் பழங்காலத்திலிருந்தே நாட்டின் பொது நலப் பணிகளை அரசன் ஏவும் வழியில் வீட்டுக்கொருவர் வீதம் பொறுப்பேற்றுச் செய்து நிறைவேற்றுவது பழக்கம். மாணிக்கவாசகருக்கு அரசு இழைத்த துன்பங்கள் கண்டு பொறுக்காமையால் வையையாறு சினம் கொண்டு பெருவெள்ளமாகப் பாய்ந்தோடி வந்தது. மதுரை மாநகரில் வையை யாற்றங்கரையில் உடைப்புக்கள். இந்த உடைப்புகளை அடைக்க வீட்டுக்கு ஒரு ஆள் வரும்படி பாண்டியனின் ஆணை பிறந்தது. மதுரையில் பிட்டு விற்றுப் பிழைத்து வ்ந்த வந்திக் கிழவிக்குக் கணவனும் இல்லை; மகனும் இல்லை. என்ன செய்வாள்? ஏழைப் பிட்டு வாணிச்சியின் இதய உணர்வுகளை ஆலவாயண்ணல் அறிந் துகொண்டு அவனே தட்டும் மண் வெட்டியும் தாங்கிக் கொற்றாளாக வந்தான். நாணயமான தொழிலாளியாகவும் நடந்து கொண்டான். கூடுதல் கூலி கேட்கவில்லை. உண்பதற்குப் பிட்டு வாங்கித் தின்றுவிட்டு வேலை செய்யப் போனான்.