பக்கம்:திருவாசகத்தேன்.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 153


மாயம்! உண்மையைப் போல் தோற்றுவது மாயம்! இந்த மாயம் நச்சுத் தன்மையுடையது! இது கடித்தவுடன் மனிதன் “நான்” ஆகின்றான். ‘நான்’ என்பது அகந்தையின் பரிணாமம். பற்றற்ற துறவி ஒருவர் பலகாலும் உண்ணாது, உறங்காது யாதொரு தீங்கும் செய்யாது நோன்பிருந்தார். அவர் இறந்து போன பிறகு சொர்க்கத்தில் இடம் கிடைக்கவில்லை! மீண்டும் பிறக்க ஆணையிட்டான் இறைவன். துறவி, “ஏன்?’’ “எதற்காக?” என்று இறைணிடம் கேட்க “நான்”. என்பது இழக்கப் பெறவில்லை என்றான் இறைவன். கொங்கண முனிவர் கதை நாடறிந்த ஒன்றுதானே! ‘நான்’ என்பது செருக்கினைத் தரும். செருக்கு, அன்பிற்குப் பகை; அருளுக்குப் பகை; மனித உறவுகளுக்குப் பகை; ஏன் அறிவுக்கும் ஞானத்திற்கும் கூடப் பகை. இந்த ‘நான்-ஐ’ ஒழித்தல் தவத்தில் சிறந்த தவம்.

“நான் கெட்ட வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ?”

“................................. நாம் ஒழிந்து
சிவமான வாபாடித் தெள்ளேனம் கொட்டாமோ?"

என்றும் மாணிக்கவாசகர் பேசுவார், இந்த நான் கெடுதலை குமரகுருபரர் “பின்னும் ஒர் மாத்திரை குறுகினன்” என்பார். அதாவது சீவன் சிவனாயிற்று. “நான்” பரந்த வெளியில் ஒற்றை மரம்! ‘நாம்’ அடர்ந்த தோப்புக்குள் ஒரு மரம்! பரந்த வெளியில் உள்ள ஒற்றை மரத்திற்கு சூறைக் காற்றடிக்கும் போது பாதுகாப்பில்லை. தோப்புக்குள் உள்ள மரத்துக்குப் பாதுகாப்பு உண்டு. “நான்” மனித குலத்தின் தீமைகளுக்கெல்லாம் மூலகாரணம். இதுதான் அப்பரடிகள் கூறிய மூலநோய் போலும்! “நான்” உடன் பிறந்தது.

“எனது” என்பது தீமை, “என்னுடையது” என்ற தீமையே அழுக்காற்றின் தாய்! வீட்டுக்கும் வீட்டுக்கும்