பக்கம்:திருவாசகத்தேன்.pdf/164

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 155

மழலைக் குழந்தையாக இருக்கும் பொழுது ‘நான்’ இல்லை; ‘எனது’ இல்லை; ‘எனது’ என்ற உணர்வு வந்தவுடன் பொய்யும் உடன் வந்து விடுகிறது. விளையாட்டுப் பொம்மையில் தொடங்கும் ‘எனது’, சொத்து வரையில் வளர்கிறது. பகையை மூட்டுகிறது. கலகத்தை வளர்க்கிறது; மனிதரைப் பிரிக்கிறது. நட்பு, காதல் உறவு எல்லாம் ‘நான்’ ‘எனது’க்கு முன் நிற்க முடியாமல் தோற்றுப் போயின. ‘எனது’ அற்றால் ‘நான்’ அறும். ‘நான்’ ‘எனது’ அற்றால் பொய் அகலும்; ‘பொய்யினைப் பல செய்து’ என்கிறார் மாணிக்கவாசகர். “பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்” என்பார் பிறிதொரு பாடலில். உண்மையல்லாதனவெல்லாம் பொய்! உரியதல்லாதது- செல்வமாயினும், புகழாயினும் அது பொய்தான்! இன்றைய சமுதாயம் இவர் அவர் என்றில்லாமல் அவரவர் தகுதிக்கு ஏற்றாற்போலப் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே புரள்கிறது. பொய் கலந்த மெய்கூட இல்லை. உண்மையைச் சொன்னால் இந்தச் சமுதாயத்தில்- ஆட்சியமைப் பில் வாழ இயலாத நிலை இன்று! இன்று உண்மையைச் சொல்வி வாழ விரும்புபவர்கள் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியதுதான்!

பொய், ‘நான்’ என்னும் செருக்கு, ‘எனது’ என்னும் செருக்கு ஆகியவை மனிதனை ஆட்கொண்ட பிறகு அவன் வாழ ஆசைப்படுகிறான்! ‘நான்’, ‘எனது’, ‘பொய்’ ஆகியன வாழ்வதற்குரிய இயல்புகள் அல்ல! ஆயினும் வாழும் ஆசை யாரை விட்டது? ஆதலால், நடிப்பர்! நடிப்பு பலவகை வாழும் களங்கள் தோறும் நடிப்பு மாறும் வீட்டில் நடிக்கும் நடிப்பு வேறு! நாட்டில் நடிக்கும் நடிப்பு வேறு சமூக நடிப்பு வேறு! நாட்டிற்குரிய நடிப்பு வேறு! வேலையிலும் நடிப்பு உண்டு! சமூக சேவையில் தொண்டும் உண்டு; நடிப்பும் உண்டு! நடிப்பை எளிதில் கண்டுணர முடியாது.