பக்கம்:திருவாசகத்தேன்.pdf/177

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பிரிவிலாத இன்னருள் !


அறிவி லாத எனைப் புகுந்து ஆண்டுகொண்டு
        அறிவதை அருளிமேல்
நெறியெ லாம் புல மாக்கிய எந்தையைப்
        பந்தனை அறுப்பானைப்
பிறவி லாத இன் னருள்கள் பெற் றிருந்துமா
        றாடுதி பின நெஞ்சே!
கிறியெ லாம் மிகக் கீழ்ப்படுத் தாய் கெடுத்
        தாய் என்னைக் கெடுமாறே!

(திருச்சதகம்— 36)

“மாணிக்கவாசகர் அறிவால் சிவமேயானவர்” என்று கூறுவது மரபு. ஆயினும் மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசகப் பாடல்களில் தம்மை “அறியாதவன்” என்றும் “அன்பில்லாதவன்” என்றும் திரும்பத் திரும்பக் கூறுகின்றார். நல்ல நன்செய்யில் மருதாம்புப் பயிரே பயிர்போல் இருக்கும். மாணிக்கவாசகரின் பழுத்த மனத்தில் பிறந்து வெளிவந்த திருவாசகப் பாடல்களின் சொற்கள் அன்பில் நனைந்தவை; கல்லைப் பிசைந்து கனியாக்கும் தன்மையவை. மாணிக்கவாசகரின்— உடலில் இதயத்தில் பெருமான் எழுந்தருளினார். “என்றன் உடலிடன் கொண்டாய் நான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே!” என்று அருளியிருப்பது உணர்க.