பக்கம்:திருவாசகத்தேன்.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

நிலத்தைத் தோண்டிக் கொண்டு கீழ் நோக்கிப் பயன மானான். அறியாமை ஆரவாரம் செய்யும்; அகங்காரம் காட்டும். எப்போதும் அறியாமை மேல்நோக்கிய நிலையிலேயே இருக்கும் செல்வன் ஒளிவான்; மறைவான்; யாருக்கும் புலப்படாமல் செயல் செய்வான்; செல்வத்தை, நிலத்தில் புதைத்து வைப்பான். வரலாறு பொருத்தமாக இருக்கிறது. இறைவன் திருமுடியைத் தேடிப்போன நான்முகன் முடியைக் காண முடியவில்லை; தோல்வியையும் ஒத்துக் கொள்ளவில்லை. படித்த பேதைகள் புத்திசாலிகள் என்று தம்மைக் கருதிக் கொண்டிருப்பவர்கள் உண்மையை- இயலாமையை ஒத்துக்கொள்ளமாட்டார்கள். பொருந்தும்படியாகப் பொய்கள் பல சொல்லி அறியாமையை அறிவு என்று வாதிடுவர். சாட்சியங்களும் வைப்பர். நான்முகன் திருமுடியைக் கண்டுவிட்டதாகக் கூறினான். இது பொய், இதற்குச் சாட்சி தாழம்பூ, திருமாலோ திருவடியைக் காண முடியவில்லை என்று ஒத்துக்கொண்டான். செல்வத்தை விட சமூகத்திற்கு அதிகத் தீமை பொய்யும் சூதும், படித்தவர்களால்தான் இவை வளர்கின்றன. அதனால், தான் பாரதி “படித்தவன் சூது பண்ணினால் ஐயோ என்று போவான்!” என்றான். நான்முகனும் திருமாலும், காண முடியாத திருவடிகள்!

மக்களே! வேதங்கள் ஒதுவதினால் மட்டும் இறைவனைக் காண முடியாது; அறிய முடியாது; அனுபவிக்க முடியாது. இறைவனை- சிவனைக் காண அன்பு தேவை. ஆற்றல் மிக்க அன்பு தேவை. நினைந்து நினைந்து நனைந்து நனைந்து அழும் அன்பு தேவை.

உயிர்கள் உடலொடு கூடி நிலத்தில் தோன்றியது உய்வதற்காக! உயிர்கள் உய்வதற்காக உடுத்துக் கொண்ட உடையனையது உடம்பு. பிறப்பின் நோக்கம் உய்தல். உயிர்- ஆன்மா, தன் முயற்சியால் மட்டுமே உய்தல் இயலாது. இறைவன் சிவனின் கருணையும்