பக்கம்:திருவாசகத்தேன்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

களைச் செய்தவர்கள் அனுபவித்தே தீரவேண்டும். இது இயற்கை - நியதி கடவுளின் ஆணை!

கையால் நெருப்பை அள்ளிக்கொட்டினால் கைகளுக்குச் சூடு உண்டு. கை புண்ணாகும். இது இயற்கை. இதுபோல வினைகளை மனம் அழுந்திச் செய்தால், விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகிச் செய்தால் அந்த வினையின் பயனை, செய்தவர் அனுபவிக்குமாறு செய்வது இயற்கை நியதி! இறைவனின் நெறிப்படுத்தும் தொழிற்பாடு! ஊட்டும் வினை' என்பார் திருஞானசம்பந்தர். வினை செய்தலில் மனமே விளைவு களுக்கு அல்லது எதிர் விளைவுகளுக்கு அடிப்படை என்பதற்கு எடுத்துக்காட்டு, சாக்கிய நாயனாரின் கல்லடியும் கண்ணப்பரின் செருப்படியும்! இவை இரண்டும் இறைவனுக்கு உவப்பாயின. காமவேளின் மலர்க்கனை உவப்பைத் தராதது மட்டுமல்ல. காமவேள் எரிய வேண்டியதாயிற்று. இவர்கள் வரலாற்றில் செய்த வினைப் பயன் கூட்டவில்லை. வினை செய்த நோக்கமும் உளப்பாங்குமே பயன் தந்தன. வினை இயற்றாமல் இருத்தல் கூடாது. வினைகள் இயற்றாமல் போனால் ஆன்மா வளராது; பக்குவப்படாது. குற்றங்களிலிருந்து விடுதலை பெறாது. வாழ்க்கையில் தேக்கம் ஏற்பட்டு விடும். அதுவும் ஒருவிதத்தில் குற்றமேயாம்! ஆதலால் வினைகள் இயற்றி வாழ்தல் வேண்டும். செய்யும் வினைகள்- காரியங்கள் தற்சார்பாக அமையாமல் பொதுமை அடிப்படை காரணமாக அமைய வேண்டும்! புவியை நடத்தும் வினைகள் இயற்றுதல்- நடத்துதல் வேண்டும். அதேபோழ்து பொதுவில் நடத்துதல் வேண்டும். செய்யும் வினைகளின் பயனை அவ்வப் பொழுது கணக்குப் பார்த்து நேர்செய்தல் வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் வினைகளின் பயனும் தொகுநிலை அடைந்து எளிதில் அனுபவித்துக் கழிக்க இயலாத நிலையை அடையும். அன்றாடம் கணக்கு நேர் செய்தலே சிறந்த வாழ்வியல் முறை.