பக்கம்:திருவாசகத்தேன்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யும் தொட்டுத் தூண்டிவிடுகின்றன. ஆனால், சிந்தனை: படைப்பாற்றல், அன்பு முதலிய புலன்கள் தொடப்படுவது கூட இல்லை. அன்புப் புலன் தூண்டி வளர்க்கப் பெற்றால் வையகம் வளரும்; வாழும். இறைவனை அடைவதற்கு, அன்பே தேவை. அம்மையும் அப்பனுமாக ஆட்கொண்டருளும் ஈசன் கூட அன்பின் வலைக்குள்தான் அகப்படுகின்றார். சிவபோகம், பெருமானின் கருணையினால் விளைவதன்று. ஆன்மாவின் அன்பினில்- ஆற்றல் மிக்க அன்பினில் விளைவதே சிவபோகம்! அம்மை சிவசக்தி ஆன்மாவுக்கு வாழ்க்கையில் விருப்பத்தை உண்டாக்குகிறாள். ஆன்மாக்கள் வாழ்தல் வேண்டும்; நன்றாக வாழ்தல் வேண்டும். வாழ்வதற்குரிய பொன் வேண்டும் என்பதனாலேயே அன்னை பராசக்தி- சிவசக்தி, காமாட்சியாக விளங்குகிறாள். அதனாலேயே அவள் காமாட்சி என்று அழைக்கப்படுகிறாள்! அன்னை காமாட்சியின் கையில் கரும்பு வில்! ஏன்? கரும்பு வில் காமத்தின் சின்னம்! சிவம்- பரசிவம் துணையாக இருந்து துறப்பிப்பது! அப்பன் சிவம், ஒளி பெருக்கும் சிவம்! ஞான ஒளி! செம்மை! அனைத்து நலன்களும் சேர்ந்தது செம்மை! இம்மை, மறுமை நலன்களை வழங்கும் செல்வம்! ‘செல்வன் சுழலேத்தும் செல்வம் செல்வமே!’ என்று திருஞானசம்பந்தரும் அருளிச் செய்தார்.

“செத்த பிறகு சிவலோகம் என்பது பித்தர் கூறும் வார்த்தை இங்கேயே இன்ப அன்பு கிடைக்கும்! இங்கேயே வாழலாம்! இம்மையே நன்மை தருவார். இப்பிறப்பிலேயே இன்பம்! இந்த மண்ணிலேயே விண்ணகம்! இந்த மண்ணில் விண்ணரசு என்பதே மானிட வாழ்வின் இலக்கு! அதனாலன்றோ சிவன், இந்தப் புவிக்கோளத்தைச் சுற்றி வருகிறான்! மனிதன் பின்னே நடந்து வருகிறான். சிவம் ஆட்கொள்ளும் களம், இந்த பூமிதான்! திருக்குறள் கடவுள் வாழ்த்தில்