பக்கம்:திருவாசகத்தேன்.pdf/99

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

இறப்பதும் இல்லை. கடவுள் என்றும் பேராற்றல் உடையவன். வரம்பில் இன்பம் உடையவன். என்றும் அவன் எண்குணத்தான்; இறைவன் தன்வயத்தனானவன். ஆதலால் இறைவனுக்கு மாற்றம் இல்லை. இறைவன் நிரந்தரமாய் நின்றருள்கின்றான்.

இறைவன் காலங் கடந்தவன்; அநாதி. உயிர்கள் கால தத்துவத்திற்குட்பட்டவை. ஆதலால் ஆதி ஆதியாக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய ஆன்மாக்களுக்கு ஆதியாகவும் நின்றருள் செய்கின்றான் இறைவன்! ஆம், இறைவன் அநாதி ஆதி! அந்தம்! ஆனாலும் எந்த நிலை யிலும் இறைவன் பாதிக்கப்படுவதில்லை! பிறவி தோறும் ஆன்மாக்கள் பந்தங்களுக்கு ஆளாகின்றன; அதனால் பாதிக்கப்படவும் செய்கின்றன! ஆனால், இறைவன் எந்தச் சூழ்நிலையிலும் பந்தமற்றவன்; பாதிக்கப் படாதவன். கடையூழிக் காலத்தில் உலகம் இல்லை. ஆயினும் கடவுள்- இறைவன் உள்ளான்! இறைவன் நிரந்தரமாக இருப்பதால்தான் உயிர்க் குலத்திற்கு ஆதியாக விளங்க முடிகிறது. கடையூழிக் காலத்திலும் இறைவன் உலகை மீண்டும் தோற்றுவித்து உயிர்களுக்குப் புத்துயிர்ப்பை வழங்குகின்றான். இறைவன் நிரந்தரமாக இருந்தால்தான் இந்த உலக இயக்கத்தை, உயிர்க்குல இயக்கத்தை நிரந்தரமாக இயக்கமுடியும். இறைவன்கடவுள் அநாதி, காலதத்துவத்தைக் கடந்தவன். இறைவன்- கடவுள் உயிர்களை நோக்க. ஆதி உயிர் களுக்கு வாழ்வளிப்பவன்! இந்த உலகம் இடையீடின்றி இயங்க ஐந்தொழில் நிகழ்த்துபவன். ஆதலால் இறைவன் நிரந்தரம்; ஆதி!

நிரந்தரமான ஆதியைச் சாரும் உயிரினங்கள் செத்துப் பிறக்கும் தொழிலுக்கு இரையாகா, நிரந்தரமாக இறைவன் திருவடி நிழலில் இன்ப அன்பில் வற்றாத முற்றாத ஆனந்தப் பெருவெள்ளத்தில் திளைத்திருக்கும்.