பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 95 உணர்வாகிய அன்பு என்பதுதான் இறைவனையும், நம்மையும் ஒன்றாக்கும் இணைப்பாகும். இந்த அன்பு, அறிவின்பாற்பட்டதன்று. அன்பு செய்தால் இறைவனை அடையலாம் என்ற அளவில், அறிவு வழிகாட்டிச் செல்லும். இது தவிர இறைவனிடம் நம்மைக் கொண்டு செல்ல அறிவு பயன்படுவதில்லை. மனம் எதிலும் நிலையில்லாததாக இருப்பினும், அதனிடத்துப் பிறக்கின்ற அன்பு என்னும் உணர்வை வைத்துக்கொண்டு இந்த ஆன்மா முன்னேற முடியும். எனவே, அடிகளார் உடம்பு, பொறிகள், புலன்கள், மனம் என்பவற்றோடு, அனுபவத்தையும் குறிப்பிட்டுவிட்டு இறுதியாக -*ego----உனக்குக் கலந்த அன்புஆகிக் கசிந்து உள் உருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன்மேல் வந்துஅருளி நீள்கழல்கள் காஅட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாஆன தத்துவனே (56–61) என்று முடிக்கின்றார். ஒரளவு உள் உருகுதல் மனத்தின் செயலேயாகும். மனத்திற்கு அந்த ஆற்றல் எவ்வாறு வந்தது? ஐந்து அறிவு உடைய விலங்குகள் தொடங்கி, ஆறு அறிவுடைய மனிதன்வரை உணர்வுக்கு இடமாக இருக்கின்ற மனத்தை, ‘நல்கி’ என்ற சொல் மூலம், இறைவனுடைய கொடை என்கிறார் அடிகளார். கசிந்து உள்ளுருகும் அன்புக்கு இடமான மனத்தைத் தந்த அவனுடைய திருவருளை நினைக்கின்றார். இதனை நீ கொடுப்பதற்கு நான் என்ன தகுதி உடையவன் என்ற வினா அவருடைய மனத்தில் தோன்றுகிறது. நன்மை என்று சொல்லக் கூடியது ஒரு சிறிதும் இல்லாத தம்போன்ற ஒருவருக்கு மேலே கூறிய அன்புக்கு இடமாகவுள்ள மனத்தை இறைவன் தந்தானே என்று நினைத்து நன்றி பாராட்டுகிறார்.