பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 97 நாவரசர் பாடும் இடமும் இவ் இறந்த காலப் பெயரெச்சத்திற்கு உதாரணம் ஆகும். இனி, நீள்கின்ற கழல்கள் என்று நிகழ்காலப் பெயரெச்சமாக்கினால் கற்பனை கடந்த ஒருவன் தம்பொருட்டாகக் கழல்களை நீட்டுகிறான் என்று பொருள்கொள்ள வாய்ப்பாகும். அடுத்து, நீளப்போகும் கழல்கள் என்று எதிர்காலப் பெயரெச்சம் ஆக்கினால் இனிவரும் அடியார்களுக்காக நீளப்போகும் கழல்கள் என்றும் பொருள்கொள்ள முடிகிறது. - ‘நல்கி', 'காட்டி என்ற இரண்டு எச்சங்களும் ‘நல்கிய', 'காட்டிய’ என்ற பெயரெச்சங்களாக மாறி 'தத்துவன்’ என்ற பெயர்கொண்டு முடிகின்றன. இவ்வாறு செய்யாமல் நல்கி', 'காட்டி என்ற இரண்டு எச்சங் களையும் வினையெச்சமாகவே வைத்துக் கொள்வோமே யானால் நின்ற என்ற ஒரு சொல்லை வருவித்து நின்ற தத்துவனே என்று முடிக்கலாம். இப்பகுதிகளுக்கெல்லாம் சைவ சித்தாந்த அடிப்படையில் பொருள் கூறுவோரும் உண்டு. அடிகளார் இறைவன் தமக்குத் திருவடிக் காட்சி கொடுத்ததை, காட்டாதன எல்லாம் காட்டிச் சிவம் காட்டி தாள்தாமரை காட்டி, தன் கருணைத் தேன் காட்டி (திருவாச : 8-6) என்று விரிவாகப் பின்னர்ப் பாடுகிறார். திருவடிக் காட்சி கிடைத்தபிறகு, தம் சிறுமையையும் அத்திருவடியின் பெருமையையும், தம்பொருட்டாக அத்திருவடிகள் மண்ணிடை இறங்கி வந்ததையும் பார்க்கிறார். பால் நினைந்து ஊட்டும் தாயைவிட உயர்ந்து நிற்கின்ற இறைவனது கருணையை நினைக்குந்தோறும் அடிகளார் வியப்பு எய்துகிறார்.