பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 திருவாசகம் - சில சிந்தனைகள் என்று அடிகளார் சொல்வதின் உட்கருத்து இதுவாகும். உள்ளத்தினுள் இருக்கின்ற ஒளியைக் காணும் வாய்ப்புக் கிடைத்தவுடன் காண்பான், காட்சி, காணப்படுபொருள்' ஆகியவை ஒளியில் மறைந்து ஒன்றாகி விடுகின்றன. இறையனுபவமும் இப்படித்தான். இறையனுபவத்தின் முதிர்ந்த நிலையில், தானும், பெறும் அனுபவமும் இரண்டும் ஒன்றாகி விடுகின்றன. அதனை இங்கே வேறு விதமாகக் கூறுகின்றார் அடிகளார். உள்ளத்துள் ஒளியாய் நிற்கின்ற போது நிற்கின்ற அவன் வேறு, காண்பான் வேறு. உள்ளம் நீராக உருகிய நிலையில் காண்பான் அழிந்து விடுகிறான். காணப்படுபொருள் அதாவது அனுபவம் மட்டுமே எஞ்சி நிற்கின்றது. அதனையே அடிகளார், 'நீராய் உருக்கி என் ஆர் உயிர் ஆய் நின்றானே' என்று கூறினார். இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே (70) பின்னர் வரும் அடியொன்றில் சோதியனே துன் இருளே’(72) என்று முரண்பட்ட இரட்டைகளும் இறைவன்தான் என்று கூறும் அடிகளார் இங்குச் சராசரி மனிதர்களின் உலக வாழ்வில்நின்று இன்பம், துன்பம் ஆகிய இரட்டைகள் பற்றிப் பேசுகிறார். சோதியில்லாத இடம் துன் இருள் சூழ்ந்துவிடும். ஆனால் இன்பம் இல்லாத இடம் துன்பமாகி விடுவதில்லை. அதேபோல துன்பம் இல்லாத இடம் இன்பமாகி விடுவதும் இல்லை. இன்பம், துன்பம் என்ற இரண்டு சொற்களும் சோதி (ஒளி), இருள் போன்ற தனிப்பட்ட பொருள்களைக் குறிக்கவில்லை. எந்த பொருள்களுக்கும் இன்பம், துன்பம் என்ற பண்புகள் இல்லை. அநுபவிக்கின்றவனுடைய மனநிலைக்கு ஏற்ப ஒன்றை இன்பம் என்றும், மற்று ஒன்றைத் துன்பம் என்றும் கொள்கிறான். அப்படி இருக்க 'இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே' என்று கூறுவதன் நோக்கமென்ன? குணங்குறி கடந்தவன்