பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 101 ஆதலால் தனித்து நிற்கும் அவனுக்கு இன்பம், துன்பம் என்ற எதுவும் இல்லை. இதனால்தான் இன்பமும் துன்பமும் இல்லானே என்றார். ஆனால், அதே இறைவன் உயிருக்கு உயிராய் ஒவ்வோர் உடம்பினுள்ளும் கலந்தும் நிற்கிறான். உடம்பின் ஒரு பகுதியாகிய காலில் அடிபடும்பொழுது அதனோடு நேரடித் தொடர்பில்லாத கண்ணில் கண்ணிர் வருவது போல உயிர்கள் படும் இன்ப, துன்பங்களில் உயிரோடு கலந்துநிற்கும் இறைவனும் பங்குகொள்கிறான் என்ற கருத்தில் இன்பமும் துன்பமும் உள்ளானே என்றார், அன்பருக்கு அன்பனே யாவையும் ஆய் அல்லையும் ஆம் (71) 'அன்பருக்கு அன்பனேட் என்று கூறுவதால் இறைவனிடத்து அன்பு இல்லாதவர்களுக்கு, இறைவனைப் பற்றிச் சிந்திக்காதவர்களுக்கு, இறைவனே இல்லையென்று சொல்பவர்களுக்கு இறைவன் நலம் செய்யமாட்டானா? தன்னிடத்து அன்பு செய்வார்களுக்கு மட்டுந்தான் அவன் அன்பனா என்ற வினாத் தோன்றுவது இயல்பு. சற்று. ஆழ்ந்து சிந்தித்தால் இந்த இரண்டு சொற்களின் ஆழத்தை புரிந்துகொள்ள முடியும். மேலே கூறிய அனைவர்க்கும் இறைவன் அன்பனாகத்தான் இருக்கின்றான். தன்னை இல்லையென்று சொல்பவர்களுக்கும், உலகிடை நலமாக வாழ அருள் செய்துள்ளான். அப்படி இருக்க 'அன்பருக்கு அன்பனே' என்று சொல்வதன் பொருள் யாது? ஒரு பொருளை நாம் சுவைக்கவேண்டுமானால் சுவைக்கின்ற உறுப்பு, சுவைக்கின்ற பொருள் என்ற இரண்டும் இருத்தல் வேண்டும். பலாச்சுளைமட்டும் இருந்து பயன் இல்லை. அதனை அனுபவிப்பதற்குரிய நாக்கும் இருத்தல் வேண்டும். நாக்கும், பலாச்சுளையும் இணையும்போது சுவை பிறக்கின்றது. அதனை நா மட்டும்தான் அனுபவிக்கின்றதே தவிர, பலாச்சுளைக்கு