பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 திருவாசகம் - சில சிந்தனைகள் அதனால் எவ்விதப் பயனும் இல்லை. நா அனுபவித்தாலும், அனுபவிக்காவிட்டாலும் பலாச் சுளையின் இனிமை முதலிய பண்புகள் அதனிடம் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அதனுடைய இயல்பு ஒரு சிறிதும் மாறுவது இல்லை. ஆனாலும், மஞ்சட் காமாலை உடையவன் நாக்கு எந்தப் பொருளையும் சுவைக்க முடியாது. கசப்பு ஒன்றுதான் அவனிடம் மிஞ்சியிருக்கும். பலாச்சுளையை வாயிலிட்டுக் கசக்கிறது என்று அவன் கூறினால் எதிரேயுள்ள நாம் பலாச்சுளை கசக்கும் என்று நினைப்பதில்லை. அதன் மறுதலையாக அதனை அனுபவிக்க முடியாத நிலையில் நோய்வாய்ப் பட்டுள்ளான் அவன் என்று அறிந்துகொள்ள முடிகிறது. அதேபோல அன்பே வடிவாக உள்ள இறைவன் யாவர்க்கும் பொதுவாக உள்ளான். அவனுடைய அருளைச் சுவைப்பதற்கு நம்முடைய மனத்திலும் அன்பு சுரக்க வேண்டும். அன்பு செய்பவர்கள் அன்பர்’ என்று அழைக்கப் படுகின்றனர். மனத்தில் தோன்றும் அன்புக்கும், அன்பே வடிவான இறைவனுக்கும் உள்ள பொதுத் தன்மையை எளிதில் அறிந்துகொள்ளலாம். இரண்டிலும் அன்பு இருக்கின்ற காரணத்தால் அன்பர்கள் இறைவனை அனுபவிக்கின்றனர். அதைத்தான் அடிகளார் 'அன்பருக்கு அன்பனே' என்று குறிக்கிறார். நோய்வாய்ப்பட்டவன் வாயிலிடும்போதும் பலாச் சுளையின் தன்மை மாறுபடாததுபோல, இறை உணர்வு இல்லாதவர்கள், இறைவனைப்பற்றி எதைக் கூறினாலும் அதனால் இறைவனுடைய தன்மை மாறுபடுவதில்லை. அவர்களுக்கும் அன்பே வடிவாகத்தான் காட்சி தருகிறான். அருள் வடிவான அவனை அனுபவிப்பதற்குரிய அன்பு அவரிடம் இல்லாத காரணத்தால் அவர்களால் அனுபவிக்க முடிவதில்லை. இத்தனை கருத்தையும் மனத்தில் கொண்டுதான் அன்பருக்கு அன்பனே' என்கிறார் அடிகளார். -