பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 திருவாசகம் - சில சிந்தனைகள் என்று கூறினர் நம் முன்னோர். பஞ்சபூதத்தை அடுத்து சந்திரனையும், சூரியனையும், ஆறாவது, ஏழாவது மூர்த்தங்களாகக் காட்டினர். விளக்கினை ஆராய்ந்த நம் முன்னோர், பிற பொருட்களை இது விளக்கினாலும், அதன்பால் தன்னைத் தானே விளக்கும் ஆற்றல் இல்லை என்பதைக் கண்டனர். எனவேதான், இப்பிரபஞ்சம் முழுவதும் இறைவனுடைய சொரூபமே என்பதை அறிவிக்கவந்த அடிகளார் தனித்தனியே இந்தச் சுடர் களைச் சொல்லாமல் சோதியனே என்று கூறினார். இவ்வாறில்லாமல் சூரியன், சந்திரன் என்று குறிப்பிட்டு இருந்தால் அவற்றின்பால் உள்ள இருண்ட பகுதி இறைவனிடமும் உண்டோ என்ற ஐயம் தோன்றும். அந்த ஐயத்தை நீக்கவே சோதியனே என்று கூறினார். ஒளிக்கு எதிர்மறையாக உள்ளது இருள். அதுவும் துன் இருள் என்றால், செறிந்து இருக்கின்ற இருள் என்பது பொருளாகும். இருள் என்ற ஒன்று, தனித்து இல்லை. இந்தச் சுடர்கள் இல்லை என்றால் உலகம் இருள் மயமாகத்தான் இருக்கும். எது எவ்வாறாயினும் இறைவன் ஒளி வடிவினன் என்று கூறிவிட்டால் அதன் மறுதலை யான இருள் யாது என்ற வினா தோன்றுமன்றே: இருளும் அவனுடைய ஒரு சொரூபம்தான் என்று கூறும் வகையில் முரண்பாட்டினிடையே முழுமுதலைக் காட்ட முயல்கிறார் அடிகளார். தோன்றாப் பெருமையனே' என்பது அடுத்துள்ள பகுதியாகும். பருப்பொருளாக உள்ள தோற்றம் புறக் கண்ணுக்குப் புலனாகும். தோன்றாப் பெருமை என்பது கண்ணால் கண்டுகொள்ள முடியாத, ஆனால் மிக எளிதாக மனத்தில் நிலைத்துவிடக்கூடிய பெருமை என்ற பொருள் தரும். இறைவனுடைய எளிவந்த தன்மை (செளலப்பியம் கண்டு அவனிடத்து ஆட்பட்டவர்கள் பலர் உண்டு. இந்த எளிவந்த தன்மையே அவனுடைய