பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 திருவாசகம் - சில சிந்தனைகள் ஆனால், எந்த மொழியாயினும் சொற்கள் எண்ணத்தை முழுவதுமாக வெளிப்படுத்துவதற்குரிய சிறந்த கருவி அல்ல. எனவே, ஆதியன் என்று கூறியவுடன் எல்லாப் பொருளுக்கும் முன்னே தோன்றியவன் இவன் என்று பொருள்கொள்வது சரியன்று. நடுவு அந்தம் அல்லானே' என்று கூறியமையால் தோற்றமும் இல்லை என்பது புலப்படும். இங்கு 'ஆதியன்’ என்று கூறியது, என்றுமுள்ள பழமையானவன் என்பதைக் குறிக்கவே ஆகும். ~. ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே (74) இறைவனை 'எந்தை' என்றும், பெருமானே’ என்றும் அடிகளார். இங்கே அழைப்பது சிந்திப்பதற்குரிய ஒன்றாகும். அனைத்து உலகையும் படைத்தவன் என்ற கருத்தில் 'எந்தை' என்று கூறுவது பொருத்தமாயினும் அந்தச் சொல்லை இங்கே பயன்படுத்துவதற்கு வேறு காரணமும் உண்டு. முன்பின் சிந்தியாமல் தன் வழியே செல்லும் மகனைத் தடுத்து நிறுத்தித் தன்வழிப் படுத்துகிறான் தந்தை. அடிகளாரைப் பொறுத்தமட்டில், 'ஈர்த்து என்னை ஆட்கொண்டாய்' என்று சொல்வது மிக ஆழமான கருத்துடையதாகும். திருவாதவூரில் பிறந்து, பாண்டி மன்னனுக்குத் தலைமை அமைச்சுப் பூண்டு, அம்முறையில் குதிரை வாங்கவே பெரும் பொருளுடன் போகிறார். உலகியல் வாழ்க்கையில் பெரிதும் ஈடுபட்டு இருந்தாரே தவிர, வாழ்க்கையைத் துறந்து துறவியாக மாற நினைத்ததேயில்லை. இறைத்தொடர்பு கொள்ளவேண்டும் என்று சிந்தித்துத் துறவு கொள்ளவும் இல்லை. பாண்டிய மன்னனின் அமைச்சராகக் குதிரை வாங்குவதற்குப் புறப்பட்டுச் செல்கின்ற அவர் திருப்பெருந்துறை எல்லையை அடைகின்றவரை அமைச்சராகத்தான் இருந்தார். அவருடைய ஒரே சிந்தனை கடற்கரைப் பட்டினம் (தொண்டி) சென்று நல்ல குதிரைகளாகப்