பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 113 தன் தொலை நோக்குக் காரணமாக அதனைப் பிரித்து அறியத் தொடங்குகிறான். சற்று நேரத்தில் இந்த ஆராய்ச்சி பயனற்றது என்பதை மனிதன் கண்டுகொள்கிறான். நோக்கு’ என்பது கண்ணால் பார்ப்பதுமட்டும் அன்று. மனத்தளவிலும் சிந்திப்பதையே நோக்கு என்று இங்கே குறிப்பிடுகிறார். நோக்கரிய நோக்கு’ என்று கூறுவதால் இது கண்வழிப்பட்ட ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு நிற்கும் அனுபவமே என்பது புலனாகிறது. கருத்தளவையைக் கொண்டு இவ்வனுபவத்தை ஆராயப் புகுந்தால், அந்தக் கருத்துக்குரிய தொலைநோக்குப் பார்வைசுடப் பயனற்றுப் போய்விடுகிறது என்பதை நோக்கரிய நோக்கே என்று கூறினார். நுணுக்கரிய நுண் உணர்வே' என்பது அடுத்து நிற்கும் சொற்களாகும். கருத்தளவை, தொலைநோக்கு என்ற இரண்டுமே பெரும்பகுதி அறிவின் துணைகொண்டு செயல்படுவனவாகும். அது முடியாது என்று கண்டவுடன், மனத்தின் இந்த ஆராய்ச்சியை விட்டுவிட்டு தம்முடைய சிற்றுணர்வால் அந்தப் பேருணர்வை குறிப்பதோடுமட்டும் அல்லாமல் ஓரளவு அதனுடைய இயல்பையும் ஆராய முற்படுகிறார். மனித மனத்திற்கு இயல்பாக உள்ளது உணர்வு; அது பலவகைப்படும். ஒரளவு புரிந்துகொள்ளக் கூடிய பசி போன்றவைபோக, நுண்மையான காதல் உணர்வும் இதன்பாற்படும். காதல் உணர்வு நுண்மை ஆனது. ஆதலால் அதுபற்றிக் கூறவந்த நம் முன்னோர், இன்னாருக்கு இன்னவிதமாய் இருந்தது என்று உரைக்கப் படாதது காமம் என்று கூறிப் போயினர். அந்தச் சிறப்பைக் கூறவந்த வள்ளுவர், 'மலரினும் மெல்லிது காமம்’ (குறள்-1289) என்று கூறிப் போயினார். உணர்வு பற்றிய இந்த அடிப்படையைத் தெரிந்துகொண்ட பிறகு இந்தச் சிற்றுணர்வைக் கொண்டு பேருணர்வை அறிந்து கொள்ள முடியுமா என்ற வினாத் தோன்றுகிறது. மனித