பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 திருவாசகம் - சில சிந்தனைகள் வேண்டும். மனிதன் கர்த்தாவாக இருக்கின்ற வரையில் கால்களின் உதவி கொண்டு நம்மைவிட்டு நீங்கும்போது போதல் என்றும், அதே கால்களின் உதவிகொண்டு நம்மிடம் வருதலை வருதல் என்றும் கூறுகிறோம். ஆனால், கனவு காண்கின்ற நாம் சூட்சும சரீரத்துடன் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள இடத்திற்கு ஒரு விநாடியில் சென்று விடுகிறோம். ஆகவே போதல், வருதல் என்ற சொற்கள் ஒப்பு நோக்குச் சொற்களே தவிர உண்மையானவை அல்ல என்பதை அறிதல் வேண்டும். உலகியலில்கூடப் போதலும், வருதலும் ஒப்பு நோக்குச் சொற்கள் என்றால் எங்கும், எவ்விடமும், எல்லாப் பொருளிலும் நீக்கமற நிறைந்த பரம்பொருள், போயிற்று, வந்தது என்று சொல்வது பொருளற்றதாகும். அதனைக் கண்டித்துக் கூறாமல் மிக மென்மையாக போக்கும் வரவும் இலாப் புண்ணியன் என்று அடிகளார் இறைவனைக் குறிப்பிடுகின்றார். அதனை அடுத்து நிற்கின்ற தொடர், புணர்வும் இலாப் புண்ணியனே என்பதாகும். புணர்வு என்பது ஒன்றோடொன்று ஐக்கியமாதல். புறத்தே காணப்படுகின்ற பொருள் நம்முடன் ஐக்கியமாகிவிடுதலைப் புணர்தல் என்கின்றோம். கனவில் நம் உடலைவிட்டுச் செல்லுகின்ற சூக்கும உடல் விழிப்பு நிலையில் நம்முள் ஐக்கியமாகி விடுகிறது. அதேபோல, அந்தர்யாமியாக இருக்கின்ற இறைவன் நம்முள் புணர்ந்து நிற்கின்றான். அப்படியிருக்க, புணர்விலாப் புண்ணியன் என்று அடிகளார் குறிப்பிடுவது எதனை? புணர்வு என்று சொல்லும்போது இரண்டு பொருள் இருத்தல் வேண்டும்; அவை ஒன்றை ஒன்று புணர வேண்டும். இங்கே அவ்வாறு இல்லை. ஆதலால், புணர்தலும் இல்லை. இமைப் பொழுதும் நெஞ்சில் இருந்து நீங்காதானை என்னுள் வந்து புகுந்தான் அல்லது