பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 திருவாசகம் - சில சிந்தனைகள் தான் என்ற நினைவு வாதவூரருக்கு வந்தவுடன் உடம்பை இழித்துப் பேசும் நிலை தோன்றுகிறது. பல்வேறுவிதமான பிறப்புக்களில், பல்வேறு வடிவுடன் கிடைக்கும் இவ் உடம்பு அனைத்துமே தோல், சதை, எலும்பு, மஜ்ஜை முதலான கலந்த ஒன்றாகும். அமீபா தொடங்கி, ஆறறிவு மனிதன்வரை எல்லா உடல்களுக்கும், வேற்று, விகார, விடக்கு அமைந்திருந்தல் கண்கூடு. இந்த நினைவு வந்தவுடன் ஆற்றேன், எம் ஐயா, அரனே' என்று கதறுகிறார். தம்முடைய அனுபவத்திற்குத் தடை இந்த உடம்பு என்ற நினைவு வந்தவுடன், அது குருவின் திருக்கை வருடிய உடம்பாகவே இருப்பினும், அது தடை என்ற நினைவு வந்ததால் ஆற்றேன், எம் ஐயா என்று அரற்றிவிட்டார். ஆற்றேன், எம் ஐயா என்று அரற்றுவதற்குக் காரணம் என்ன என்பதை அடுத்த அடிகளில் பேசுகின்றார். போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யானார் மீட்டு இங்கு வந்து வினைப் பிறவி சாராமே கள்ளப் புலக் குரம்பை கட்டு அழிக்க வல்லானே (86–88) , மெய் என்ற பெயரை வைத்துக்கொண்டிருக்கிற இந்த உடம்பு உண்மையில் பொய்யானதுதானே! மெய் என்று பெயர் வைத்திருக்கும் இந்தப் பொய் உடம்பு அழிந்தால், மெய்யாக அதனுள் இருக்கும் ஆன்மா விடுதலை அடையும். விடுதலை அடைந்த ஆன்மா மறுபடியும் இவ்வுலகிடைப் பிறந்து மற்றொரு உடம்புள் புகும் நிலையையும் போக்கி அருள் செய்யக்கூடியவன், ஒருவன் தான். அவனைப் போற்றிப் புகழ்வதால் இந்த நிலை சித்திக்கும் என்கிறார் அடிகளார். அவன் எத்தகையவன்? நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே (89)