பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கீர்த்தித் திருஅகவல் சிந்தனைகள் இன்று காணப்பெறும் திருவாசகப் பிரதிகளில் சிவபுராணத்தை அடுத்துக் காணப்படுவது, கீர்த்தித் திருஅகவல் ஆகும். கீர்த்தி என்ற வடசொல் பழைய தமிழிலக்கியங்களில் காணப்பெறவில்லை. எனவே, எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அடிகளார். இப்பெயரை இட்டிருப்பாரா என்பது சிந்தனைக்குரியது. இன்று காணப் பெறும் பிரதிகளில் இப்பெயரை அடுத்து சிவனது திருவருட்புகழ்ச்சி முறைமை என்ற தலைப்பும் காணப் பெறுகிறது. இறைவன் உயிர்கள்மாட்டுக் கொண்ட கருணை காரணமாகப் பல்வேறு இடங்களில், பல்வேறு காலங்களில், பல்வேறு வடிவங்களில் தோன்றித் திருவிளையாடல் புரிந்துள்ளான். இறைவன் தானேயோ அன்றித் தன். திருவருள் பெற்ற அடியார்கள் மூலமாகவோ பல செயல்களைச் செய்கிறான் என்பதை எல்லாச் சமயங்களும் ஏற்றுக்கொள்கின்றன. சிற்றறிவுடைய உயிர்கள் இறைவன் திருவருட்செயல்களைச் சிந்திக்கத் தொடங்கியவுடன் வியப்படைகின்றன. அடுத்து, இத் திருவிளையாடல்கள் தம்பொருட்டாகவே நிகழ்த்தப் பெற்றன என்பதை உயிர்கள் அறிகின்றன. இவ் விளையாடல்களைச் செய்வதன்மூலம் இறைவன் எவ்விதப் பயனையும் அடையவில்லை. அதனாற்றான் இச் செயல்களை விளையாடல்கள் என்று குறிப்பிடுகிறோம். இம்மட்டோடன்றிப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவைசுட விளையாட்டாகவே நிகழ்த்தப்பெறுகின்றன என்பது இந்நாட்டவரின் முடிவான கொள்கை