பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீர்த்தித் திருஅகவல் - சிந்தனைகள் 139 என்னுடை இருளை ஏறத் துரந்தும் அடியார் உள்ளத்து அன்பு மீதுரக் குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும் (6–8) முதல் ஐந்து அடிகளில் மண், விண், அவற்றிடை வாழும் உயிர்கள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பொதுவாகக் கூறிக்கொண்டுவந்த அடிகளார், திடீரென்று ஆறாவது அடியில் கீழே இறங்குகின்றார். முதல் ஐந்து அடிகளில் கூறப்பெற்ற பொருளை ஒட்டு மொத்தமாகச் சிந்தித்தால் ஒன்றை விளங்கிக்கொள்ள முடியும். பல்வேறு உலகங்கள், பல்வேறு காலங்கள், பல்வேறு உயிர்கள் ஆகிய அனைத்தையும் படைத்துக், காத்து, அழிக்கின்ற பரம் பொருள் மிகப் பெரிய பேராற்றலாய் எங்கும், என்றும் நிறைந்துள்ளது என்ற கருத்து நம் மனத்தில் தோன்றுவது நியாயமே ஆகும். இவ்வளவு பெரிய செயல்களைச் செய்யும் பேராற்றல் தனிப்பட்ட மனிதர்களைக் கண்டுகொள்ள முடியுமா என்ற ஐயம் சிலர் மனத்திலாவது தோன்றல் இயல்பே. அதனைப் போக்குதற்கு அவனுடைய எளிவந்த தன்மையைச் சொல்லத் தொடங்குகின்றார். அப்படிச் சொல்லும்போதுகூடத் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறுவதன்மூலம் அவனுடைய எளிவந்த தன்மை உண்மை யானதுதான் என்று நம்மை ஏற்கச் செய்கின்றார். இருளை ஏறத்துரத்தல் என்பது திருப்பெருந்துறையில் கிடைத்த அனுபவமாகும். சாதாரணமாக ஆணவம் முதலிய இருள் நீங்கவேண்டுமேயானால் சரியை, கிரியை முதலிய வழிகளைப் பின்பற்றிப் பல்லாண்டுகள் இறை அருளை வேண்டி வழிபட வேண்டும். அப்படியும் ஒரே பிறப்பில் இவ்விருள் முழுமையாகப் போவதில்லை. சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர் என்ற மூன்று நிலைகளில், மூன்றாவது நிலையை அடைந்தவர்களைக்கூட இந்த ஆணவ இருள் முற்றிலுமாக விடுவதில்லை என்று கூறுவர்