பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 திருவாசகம் - சில சிந்தனைகள் சாத்திரக்காரர்கள். இந்தச் சாத்திரக்காரர் கூறும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு மார்க்கங்களில், அமைச்சராக இருந்த திருவாதவூரர் எந்த ஒன்றையும் பின்பற்றியதாகத் தெரியவில்லை. சாத்திரக்காரர்களின் கொள்கைக்கு மாறாகத் திருப்பெருந்துறையில் குருவாய் எழுந்தருளி வந்தவன் தம்முடைய இருளை ஒரே கணத்தில் ஒரேயடியாகப் போக்கினான் என்பதைக் கூறவந்த அடிகளார் 'ஏறத்துரந்தும்’ என்று கூறுகின்றார். அடிகளாரின் சொற்களிலுள்ள நுண்மையைக் கவனிக் காமல் சாத்திரக் குப்பிக்குள் இவரை அடைப்பது பொருந்துமா என்பதைச் சாத்திரக்காரர்கள் சிந்திக்க வேண்டும். - தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஆறாவது அடியில் கூறவந்த அடிகளார் முதலைந்து அடிகளில் அவனுடைய பெருமையைக் கூறவேண்டிய தேவை என்ன? ஒரே பிறப்பில், ஒரே விநாடியில் தம்முடைய இருளை ஏறத் துரக்க முடியுமானால் அது எவ்வாறு முடிந்தது என்ற வினாவிற்கு விடை கூறுவார்போலப் பல்லுயிர் எல்லாம் படைத்து அவ்வுயிருள் உறையும் இறைவன் கருணை வைத்தால் ஒரே விநாடியில் இருளை ஏறத்துரக்க முடியும் என்பதையும், சோப்ானமுறை தேவையில்லை என்பதையும் எடுத்து விளக்கிவிட்டார். அடுத்து உள்ள அடியில் நம் உள்ளத்தில் இயல்பாக எழும் ஓர் ஐயத்திற்கு விடையளிக்கின்றார். திருவாதவூரர் ஒருவருக்குத்தான், ஒரே பிறப்பில் இருளை ஏறத்துரக் கின்ற வாய்ப்புக் கிட்டியதேதவிர அது பொதுவான நியாயமன்று என்று கூறும் மக்களை நோக்கி எல்லா அடியார் உள்ளத்திலும் இறைவன் குடியாக உள்ளான் என்று கூறுமுகமாக, அவர்கள் ஐயத்தைப் போக்கி விடுகிறார்.