பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 திருவாசகம் - சில சிந்தனைகள் அமைச்சராக இருந்த காரணத்தினால் பரந்துபட்ட உலகியல் அறிவும் அவருக்குக் கிடைக்கிறது. பாடுகின்ற ஆற்றலும் அவர்மாட்டு இருந்திருக்க வேண்டும். அந்த ஆற்றலை வெளிக்கொணர அமைச்சராக இருந்தபோதே திருக்கோவையார் பாடுமாறு இறைவன் உள்ளேயிருந்து தூண்டியிருக்க வேண்டும். தேர்ந்த கல்வி அறிவு, உலகியல் அறிவு, சிறந்த கவிதை இயற்றும் ஆற்றல் ஆகிய அனைத்தும் நிரம்பிய அமைச்சராகத் திருவாதவூரர் இருந்து வருகிறார். இந்நிலையில் ஆலவாயின் அவிர்சடைக் கடவுள் திருவாதவூரரைத் திசைதிருப்பி ஆட்கொண்டு உலகத்திற்குப் பயன்தரும் திருவாசகத்தை அவர் மூலம் வெளிப்படுத்த முடிவு செய்தான். அதன் பயனாக, திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் மனித வடிவுடன் குருவாக அமர்ந்திருக்கிறான். அமைச்சர் தோரணையுடன் வருகின்ற திருவாதவூரருக்கு இந்தக் குருவின் காட்சி ஒரே விநாடியில் முழு மாற்றத்தைத் தந்து விடுகிறது. இது நிகழ்ந்த விதத்தை அடிகளார், கருணையின் பெருமை கண்டேன் காண்க புவனியில் சேவடி தீண்டினன் காண்க சிவன் என யானும் தேறினன் காண்க - (திருஅண்ட 60-63) என்றுபேசுகிறார். இறைவன் கற்பனைக்கு எட்டாதவன், எங்கோ எழுந்தருளியிருக்கிறான் என்று கல்வி அறிவின் மூலம் கருதியிருந்த திருவாதவூரருக்கு, புவனியில் சேவடி தீண்டினன்' என்று சொல்லும்போது, அவர் இதுவரையில் கொண்டிருந்த கற்பனை தகர்ந்து விடுகிறது. தேவர்களேகூட பூமியில் சேவடி தீண்டாதவர்கள் என்று கொண்டிருந்த கற்பனை அடிபடுகிறது. அதனால்தான் பெருவியப்போடு அந்தக் குருவின் திருவடி இந்த மண்ணின்மீது பட்டிருப்பதைக் கண்டு வியக்கிறார். இவர்