பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூன்முகம் 7 மனிதர்களில் ஒருவரோ என்ற ஐயம் முதல் விநாடியில் திருவாதவூரர் உள்ளத்தில் தோன்றியிருக்க வேண்டும். ஆனால், மனிதர்போல் இருக்கிற அந்தக் குருவிடத்திலிருந்து புறப்பட்ட அதிர்வுகள் (vibrations) தம்மை முழுவதுமாக ஆட்கொள்ளுவதை உணர்கின்றார் திருவாதவூரர். மனிதர்களுள் யாரோ ஒருவர் என்ற எண்ணம் மறையத் தொடங்கிவிடுகிறது. எந்த மனிதனுக்கும் இத்தனை அதிர்வுகளை உண்டாக்கும் ஆற்றல் இல்லை. எனவேதான், ‘சிவன் என யானும் தேறினன் காண்க என்று பேசுகிறார். ஆக, அந்தப் பெருமான் அருகில் சென்று அவர் அருளைப் பெறுவதற்கு முன்னரேகூட, திருவாதவூரரின் ஆழ்மனம் அவர் யார் என்பதை உணர்ந்து கொள்கிறது. இங்கே தர்க்க ஆராய்ச்சிக்கு இடமே இல்லை. இந்த மனநிலையிற்றான் அந்தக் குருவின் எதிரே செல்கிறார்; அவர் உபதேசம் செய்கிறார். அந்த உபதேசச் சொற்கள் இவரை முழுவதுமாக மாற்றிவிட்டன. எனை நான் என்பது அறியேன், பகல், இரவாவதும் அறியேன்” (திருவாச : 34-3), என்று பின்னர் அந்த முதல் அனுபவத்தைப் பெருமான் பாடுகிறார். இந்த மாபெரும் அனுபவம் அவரைத் தன்னுள் மூழ்கடித்து அதனுள்ளேயே இருக்குமாறு செய்கிறது. இப்போது எதிரேயுள்ள குரு, அவருடைய சீடர்கள், திருப்பெருந்துறை என்ற எதுவும் அவருடைய புறக்கண்களுக்குப் புலனாகவில்லை. தேனில் விழுந்த ஈயைப்போல அந்த அனுபவத்தில் ஆழ்ந்துவிடுகிறார். எவ்வளவு காலம் அவர் அப்படி இருந்தார் என்று அவரும் சொல்லவில்லை; நாமும் அறியோம். அந்த அனுபவத்தில் இருந்து மீண்டபொழுது எதிரே குருவும் இல்லை; சீடர்களும் இல்லை. கண்டது கனவோ என்று அஞ்சுகிறார் பெருமான். ஆனால், கனவு இத்தகைய அருளனுப்வத்தைத் தருதல் இயலாத காரியம். எனவே அனுபவம் உண்மைதான்; குரு இருந்ததும் உண்மைதான்;