பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 திருவாசகம் - சில சிந்தனைகள் மாதிரியான மனநிலை மனிதர்களிடம் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் தங்கள் தன்மையும், தங்கள் திறமும்தான் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும்; ஏனையோர் அனைவரும் இந்நெறி நில்லாமையால் அழிவை எய்துவர் என்று கூறும் குறுகிய சமயவாதிகட்கு விடை கூறுவதுபோல இந்த இரண்டு அடிகளும் அமைந்துள்ளன. தன்மையும், திறமும் மாறுபட்டுள்ளவர்களை எப்படி ஆட்கொள்கிறான் இறைவன்? அப்பரிசதனால் என்பதால், அவர்கள் தன்மையையோ, திறத்தையோ மாற்றிக்கொள்ள வேண்டுமென்று இறைவன் கட்டளையிடுவதில்லை. அதனை அப்படியே ஏற்றுக்கொண்டு (அப்பரிசு அதனால்) அவர்கள் வழியிலேயே செல்லுமாறு செய்து இறுதியாக அவர்களை ஆட்கொள்கின்றான். உதாரணமாக ஒன்றைக் காணலாம். திண்ணனார், திருநாளைப்போவார் (நந்தனார்) ஆகிய இருவருடைய வாழ்க்கையையும் எடுத்துக்கொண்டு பார்க்கலாம். தம்முடைய பிறப்புத் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தது, தமக்குக் கல்வியறிவில்லை, இறைவனுடைய சிறப்பை அறிந்துகொள்ளும் முயற்சியுமில்லை என்ற எந்தக் கவலையும் படாதவர் திண்ணனார். இறைவனை நிர்க்குண, நிராமய, நிராலயனாக அவர் காணவில்லை. மலையிடைத் தமக்கு வாய்த்த உற்ற தோழனாகவே குடுமித்தேவரைக் கருதுகிறார். அதனாற்றான் தன் வாயிலிருந்த நீரைத் தேவருக்கு அப்படியே அபிடேகம் செய்யவும், தமது செருப்புக் காலைத் தேவரின் முடிமேல் வைக்கவும் அவர் தயங்கவில்லை. ஆறே நாளில் அவருக்கு வீடுபேற்றைத் தந்த குடுமித்தேவர் திண்ணனாரின் தன்மையையும் திறத்தையும் மாற்றவில்லை; மாற்ற விரும்பவுமில்லை. அப்பரிசு அதனாலேயே அவரை ஆண்டுகொள்கிறார்.