பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 திருவாசகம் - சில சிந்தனைகள் அவர் அருளுபதேசம் செய்ததும் உண்மைதான். இப்போது அவர் மறைந்ததும் உண்மைதான். அப்படியானால் அவர் மறைவுக்குக் காரணம் என்ன என்ற ஆராய்ச்சியில் புகுந்தார் பெருமான். தம் தகுதி இன்மையால் இறைவன் தம்மை இங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டான் என்று புலம்புகிறார். அந்த அனுபவம் கைவிட்டுப் போனவுடன், இனி இந்த உலகில் வாழ்ந்து பயனில்லை என்றெல்லாம் நொந்துகொள்கிறார். இந்த வருத்தம், பச்சாதாபம் எவ்வளவு காலம் நீடித்தது என்று தெரியவில்லை. கருணாமூர்த்தியாகிய இறைவன் உள்நின்று உணர்த்தி இருக்க வேண்டும். ஆகவேதான், உயிரைத் துறக்க நினைக்காமல் இந்த அனுபவத்தை நினைந்து நினைந்து பாடவேண்டுமென்று நினைக்கிறார். பசுமாடு சுரப்பு விடவேண்டுமானால் கன்றுக் குட்டியை அவிழ்த்துவிட வேண்டும். அது ஊட்டத் தொடங்கியவுடன் பால் சுரக்கிறது. அந்தச் சுரப்பால் கிடைக்கும் பாலை நாம் பெற வேண்டும்ானால், கருணை காட்டாது, கன்றுக் குட்டியை இழுத்துத் துரத்தில் கட்டத்தான் வேண்டும். அதுபோலத் திருவாதவூரருக்கு அருளனுபவத்தைத் தந்த இறைவன், அதிலேயே அவர் மூழ்கிவிடாமலிருக்க, அந்த அனுபவத்தைத் தொடராமல் தடுத்துவிட்டார். காரணம் திருவாசகம் ஆகிய பால் மனித குலத்திற்கு வேண்டும். இந்த நினைவு வந்தபிறகு திருவாதவூரர் பாடும் பணியையே பணியாய்க் கொண்டார். சில நாழிகை கிடைத்த அந்த அனுபவத்தை நினைந்து நினைந்து பார்க்க, அதனைப் பாடலாக்கிவிட வேண்டுமென்ற எண்ணம் இறையருளால் அவர் உள்ளத்தில் தோன்றுகிறது. அமைச்சராக இருந்த வாதவூரர் எல்லாவற்றையும் உதறி விட்டு, இருபத்து நான்கு மணி நேரமும் அந்த அனுபவத்தைய்ே நினைந்து நினைத்து பாடிக்கொண்டு ஊர் ஊராகச் செல்கின்றார். சில சமயங்களில் ஒரே கருத்துப் பல பாடல்களில் வருமாறு பாடுகிறார். அது