பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 திருவாசகம் - சில சிந்தனைகள் பொருத்தமற்றது ஆகும். அதன் பக்கத்தில் மற்றொரு பொருளை நிறுத்தி, அதனோடு இதனை ஒப்புமை செய்யும்போதுதான் அதனைவிட இது சிறியது; இதனை விட அது பெரியது என்று சொல்லமுடிகிறது. இந்த அடிப்படையில் எல்லைகாண முடியாததாய் விரிந்து கொண்டே இருக்கும் அண்டத்தை நம் மனக்கண்முன் நிறுத்திய அடிகளார். இத்துணைப் பெரிய அண்டமும் சிறிது என்று சொல்லும் படியாக, இதனைவிடப் பெரியவனாக இருக்கின்றான் இறைவன் என்று சொல்ல வருகின்றார். இதனை அப்படியே சொல்லியிருக்கலாம். ஆனால் பெரியதை விரிவாகப் பேசிய அடிகளார் சிறியதற்கும் ஒரு வடிவு கொடுக்கின்றார். அதுவே 'இல்நுழை கதிரின் துன்னணுப் புரைய’ என்ற அடியால் விளக்கப் பெறுகிறது. நகர வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் இந்த அடியின் பொருளைப் புரிந்துகொள்வது கடினம். கிராமங்களில், தென்னங்கீற்று வேய்ந்த கூரைவீடுகளில் வாழ்கின்றவர்கள் அன்றாடம் காணுகின்ற புதுமையாகும் இது. சூரியன் மேலே வரவர கீற்றில் காணப்படும் துவாரங்கள் வழியாக, சூரியஒளி வீட்டின் தரையில் படும். பக்கத்தில் இருந்து பார்த்தால் ஒரு நேரிய குழாய்வடிவில் அந்த ஒளிக்கற்றை காணப்படும். கூர்ந்து நோக்கினால், இவ்வொளிக்கற்றையுள் மிகமிகச் சிறிய துகள்கள் மேலும்கீழும் பக்கவாட்டிலும் மிதப்பது கண்ணுக்குப் புலப்படும். இங்ஙனம் மிதக்கும் துகள்கள், சிறியதும் பெரியதுமாக இருப்பதையும் காணலாம். பாண்டி நாட்டின் தலைமை அமைச்சர் கூரைக் குடிசையில்மட்டும் தென்படும் இக்காட்சியை எங்கே கண்டாரோ தெரியவில்லை; ஆனாலும் அதனை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். மிதக்கும் துகள்களிலேயே மிகமிகச் சிறிய துகளொன்றைக் காணுமாறு நம்மைப் பணிக்கின்றார். இது என்ன வேடிக்கை?