பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி - சிந்தனைகள் 191 அருண் மொழிகளையும், அருட்செயல்களையும் வெளிப் படுத்திற்று. மேகம் சிதறிய துளிகள் திரண்டு, பெரிய ஆறாகப் பெருகுவதுபோல திருப்பெருந்துறையில் ஞான குருவின் அருண் மொழிகள், அருட்செயல்கள் ஞான ஆறாகப் பெருக்கெடுத்தது. ஆறு, தோன்றிய இடத்தில் அல்லாமல் நீண்ட தூரம் ஒடிச்சென்று பல்வேறு குழிகளையும் பள்ளங்களையும் நிரப்புகிறது. அதேபோன்று குருவினிடம் இருந்து புறப்பட்ட ஞான ஆறு, நாலா பக்கங்களிலுமுள்ள அடியவர்களின் உள்ளங்களில் பாய்ந்து அவர்கள் மனத்துள்ளிருக்கும் அறுவகைக் குற்றங்கள் என்னும் குழிகளை நிரப்பிற்று. அறுவகைச் சமயத்தோரும் அவ்வவர் சமயங்களினூடு ஞானத்தைத் தேடி அலைந்தனர். அது கானல் நீராக முடிந்தமையின் அச் சமயவாதிகள் என்னும் மான்கணம் நெஞ்சம் மறுகி நிலைகுலைந்து நின்று விட்டது. ஞானப் பேரியாற்றில் பயன் துய்த்த பெரியோர் அடைந்த பேரானந்தத்தைக் கண்டு அடியவர்கள் வழிபாடு என்ற வயலில் அன்பு என்னும் விதையை வித்தி, அதிலிருந்து சிவபோகம் என்னும் பயிரைப் பெற்றுய்யுமாறு திருப்பெருந்துறையில் தோன்றிய குருவாகிய மேகம் அருள் சுரந்தது என்க. திருப்பெருந்துறையில் மானிட வடிவிலிருந்த குருபரன் திருவாதவூரருக்கு அருள்செய்து, ஞானானந்தப் பெருங் கடலில் மூழ்குமாறு செய்தான். அவ் ஆனந்தப் பெருங் கடல், திருவாதவூரரின் உள்ளத்தை நிறைத்து அவரைத் தன்வயம் ஆக்கிக்கொண்டு, அவரது திருவாய் இதழ்கள் வழியாக, திருவாசகம் என்னும் ஞானப் பேராறாகப் பெருகிற்று. எங்கோ தோன்றிய ஆறு பலகாத தூரத்திற்கு அப்பாலும் பயிர்களை விளைவிப்பதுபோல, ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் திருவாதவூரர் திருவாய்வழிப் பெருக்குற்ற திருவாசகம் என்னும் ஆறு, உலகிடை ஆன்மிகப் பயிர் தழைக்க உதவிற்று; உதவுகிறது; உதவும்.