பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி - சிந்தனைகள் 205 என்ற அளவைகளால் ஆராயப்புகுந்த அறிவு, இறைவன் இல்லையென்று சிலகாலமும் பின்னர் வளர்ந்த நிலையில் உண்டு என்றும் சொல்லத் தொடங்குகிறது. இந்த இரண்டு நிலையிலும் உள்ள அந்த அறிவுக்கு எட்டாதவனாய் ஒளித்து நின்றான் என்க. இந்நாட்டவர், அறிவின் துணைகொண்டு இறைவனை அறிய முடியாதென்றும் ஒரளவு அவனுடைய இயல்புகளை அறிவினால் ஆராய்ந்து சொல்லலாமேனும் அவனைக் காணவோ, அனுபவிக்கவோ இயலாது என்றும் கூறினர். அறிவின் இந்தக் குறைபாட்டை அறிந்த நம்மவர் அதை ஒதுக்கி விட்டு உணர்வின் மூலமே அவனை அனுபவிக்கமுடியும் என்றும் அந்த உணர்விற்கு ஆதாரமாயிருப்பது அன்பு என்றும் கூறினர். மேலே கூறப்பெற்ற பல்வேறு மக்களுக்கும், பல்வேறு நிலையில் உள்ளவர்களுக்கும், பல்வேறு வாழ்க்கை முறையை மேற்கொண்டவர்களுக்கும் அகப்படாமல் ஒளித்துநின்ற கள்வனை இன்று தம்கண்ணெதிரே கண்டதைக் கூறுகிறார். பிறருடைய வாழ்க்கைமுறைபற்றி மேலே கூறிய அடிகளார் இப்பொழுது தம்முடைய வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறார். இதுவரை இருவகை வாழ்க்கையில் அவர் ஈடுபட்டிருந்தார். ஆமாத்திய குலத்தில் தோன்றியவராகிய அவர், பெரும் கல்வி கேள்விகளில் சிறந்திருந்ததோடு, தம் குலத்திற்கு ஏற்ப அமைச்சுப்பதவிக்கு வேண்டிய அறிவையும் பெற்று இருந்தார். தொடக்கதில் சரியை, கிரியை என்று சொல்லப்படும் மார்க்கங்களைப் பின்பற்றி சிவபூசை முதலியன செய்திருத்தல் வேண்டும். அப்பொழுது இறைக் காட்சி அவருக்குக் கிட்டவில்லை. இதனையே பண்டே பயில்தொறும் ஒளிக்கும் சோரன்' என்றார். அடுத்தபடியாக வாழ்க்கையின் இரண்டாம் கட்டத்தில் மாபெரும் பக்தன் ஆகிய விரகுண பாண்டியனுக்கு அமைச்சுத் தொழில் பூண்ட காலத்தில் மக்கள்