பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 திருவாசகம் - சில சிந்தனைகள் நீர்க்கடல் பெளர்ணமி நாளில் பொங்குமாப்போலே, பாற்கடல்போன்ற இனிமையான இறை அனுபவ அமுதம் என்னுள் பொங்கி நிரம்பிவழிந்து மயிர்க்கால்தோறும் வெளிப்படச் செய்தனன். இப்பகுதியில் முழுமதி(உவா) நாளில் கடல் பெருகு வதை உவமையாகக் காட்டியதில் ஒரு சிறப்பு உண்டு. என்றுமே நிரம்பி அலைபுரளும் கடல் உவாநாளன்று முன்பு காணாத வகையில் அலைகள் மிக்குயர்ந்து புரளுவது கண்கூடு. திருவாதவூரரைப் பொறுத்தமட்டில் பல்வேறு அனுபவங்கள் மனத்தில் நிறைந்திருப்பினும் பெரும்பக்தனான வரகுணனுக்கு அமைச்சராக இருந்தமை யாலும், சொக்கப் பெருமானை அன்றாடம் வழிபட்டமை யாலும் இறையன்பு மனத்தில் அமைதியாக நிறைந்து இருந்தது என்பது இயல்பேயாகும். உவாநாளில் எங்கோ புறப்பட்ட சந்திரன் கீழேயுள்ள கடலின்நீரை ஈர்த்துப் பெருக்கமடையச் செய்வதுபோல் திருவாதவூரரின் மனத்திலுள்ள அமைதியான இறையன்பை, திருப் பெருந்துறையில் தோன்றிய குருநாதர் எல்லை மீறிப் பெருகச் செய்து அவரையே அதனுள் அமிழ்ந்து விடுமாறு செய்துவிட்டார். பொங்கியெழும் கடல்நீர் புதிய இடங்களையும் சென்று ஆக்கிரமித்தல்போல திருப் பெருந்துறையில் பொங்கியெழுந்த இறையனுபவம், மனம் என்னும் இயல்பான தன் இடத்தைவிட்டு உடல் முழுவதும் பரவி மயிர்க்கால் தோறும் வெளிப்படலாயிற்று 6TöüᎢ$. காதல் அனுபவத்தைக்கூட இன்னவிதம் என்று எடுத்துச் சொல்லமுடியாதது என்று கூறினர் நம் முன்னோர். அதுவே அவ்வாறானால், அதைவிடப் பன் மடங்கு மேம்பட்ட இறையனுபவத்தை இன்னவிதமாய் இருந்தது என எடுத்துக்கூறல் எவ்வாறு முடியும்? இதனை வெளிப்படுத்தவே வாக்கிறந்த' என்றார் அடிகளார்.