பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 திருவாசகம் - சில சிந்தனைகள் இறைவனைப் பரவுவதும் அமுதம் போன்றதும் ஆகிய திருவாசகம்) தோன்றிற்று என்றால் அதற்குத் தாம் காரணம் என்ற நினைவு ஒருசிறிதும் தோன்றாதிருக்க 'அருளொடு கருணை வான்தேன் கலக்க' என்று கூறினார். அவனுடைய அருள் அனைத்துயிர்க்கும் பொதுவான தாகும். திருவாசகத்தைத் தோற்றுவித்து அதன்மூலம் உயிர்களை உய்விக்க வேண்டும் என்று இறைவன் கருதினான் என்பதால் அருளொடு’ என்றார். அந்த அற்புதம் என் மூலம் ஏன் தோன்றிற்று என்றால் அது அவன் என்மாட்டுக் கொண்ட கருணையால் என்கிறார். அடுத்து, பிரமன் மால் அறியாப் பெற்றியோன் என்பது சிந்திக்கத் தக்கதாகும். இறைவனைப்பற்றி எத்தனையோ பெருமைகளைக் கூறலாம் எனினும், பிரமன் மால் அறியா என்று இங்குக் கூறியதற்கு ஒரு காரணம் உண்டு.அறிவாலும் செல்வத்தாலும் அடைய முடியாதவன் என்பது உண்மை. முன்னரே திருக்கோவையார் பாடிய மையின் அறிவில் சிறந்திருந்தார் என்பதும், தலைமை அமைச்சராக இருந்தமையின் செல்வத்தில் சிறந்திருந்தார் என்பதும் உண்மை. அப்படி இருந்தும் தமக்கு எளிதாக அவன் அருள் கிட்டியது என்கிறார். அவ்வாறு கிட்டியதற்குத் காரணம் அவன் கருணையே அன்றி, தம்மாட்டு இருந்த அறிவோ, செல்வமோ, தகுதியோ அல்ல என்பதை அறிவுறுத்தவே பிரமன் மால் அறியாப் பெற்றியோன்’ என்று கூறி முடிக்கிறார் அடிகளார். கணக்கில் அடங்காத பேரளவுடைய அண்டத்தின் வடிவை விளக்கி, அதனினும் பெரியவன் இறைவன் என்று சொல்லிக்கொண்டு, திரு அண்டப்பகுதி தொடங்குகிறது. கண்ணிற்கும் கருத்திற்கும் அப்பாற்பட்டு விரிந்து கொண்டே செல்லும் பேரண்டம், இறைவனோடு ஒப்பிடும்போது ஒரு துகள்போலச் சிறியதாகி விடும் அளவிற்கு அத்துணைப் பெரியவன் இறைவன் என்கிறார்.