பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 திருவாசகம் - சில சிந்தனைகள் தவிர, உண்மையைக் காணவேண்டும், நிறுவவேண்டும் என்ற பகுதிகளில் செல்வதே இல்லை. மதம் பிடித்த யானை, செய்யத் தக்கது இன்னது, செய்யத் தகாதது இன்னது என்ற வேறுபாடற்று எதிரே உள்ளவை அனைத்தையும் அழிப்பது இயல்பு. இதனை 'உன்மத்தம்’ என்று கூறுவர். உன்மத்தம் என்பதன் சுருக்கமாகவே 'மத்தம்’ என்ற சொல் பயன்படுத்தப்பெற்றது. அடங்கி நிற்கின்ற சாதாரணக் களிற்றுக்கே மதம் அல்லது வெறி பிடித்ததால், அது கட்டுமீறித் தவறையும் இழைக்கின்றது. அதேபோல, அகங்காரம் என்னும் வெறி பிடித்ததால், எல்லைமீறி அனைவரையும் வெற்றிகொள்ள வேண்டும் என்ற அவா(வெறி மிகுந்துவிடுகிறது. அதன் பயனாகச் சமநிலை அழிக்கப்படுகிறது. குளத்தின் சமநிலையை மதக்களிறு உழக்குவதுபோல், சமுதாயத்தின் சமநிலையை ஆணவ அவா உடையவன் குழப்புகின்றான். கல்வி என்பது பல்வகைப்பட்ட பிரிவுகளை உடையதாய் ஒவ்வொரு பிரிவும் ஒருகடல்போல் விரிந்து இருத்தலின் பல்கடல் பிழைத்தும்’ என்றார். கல்வியைக் கடல் என்று உருவகம் செய்தமை முற்றிலும் பொருத்தம் ஆனதே ஆகும். கடலின் அகல, நீள, ஆழம் என்பவை அளத்தற்கு அரிது ஆதலின் கல்வியைக் கடல் என்றார். ஒருவன் ஒருதுறையில் எவ்வளவு கற்பினும் அத்துறையை முழுவதுமாக அறியமுடியாது. கடலின் மேற்பரப்பில் நீந்துபவன் மேலோட்டமாக இருக்கின்றானே தவிர ஆழத்தை அறிதல் இல்லை. கல்வியிலும் அதுபோலத்தான் என்க. இவ்விடத்தில் 'பிழைத்தும்’ என்று கூறியது மிகமிகப் பொருத்தமாகும். கல்வியை அதிகம் பயிலப்பயில தம்முடைய அறியாமையை அறிந்து கொள்வோர் ஒரு சிலரே ஆவர். ஏனையோர் தாம் அனைத்தையும் கற்றுவிட்டதாகக் கருதி இறுமாப்புக் கொள்வர். இதனை வடநூலாரும் வித்யா கர்வம்' என்பர். எனவேதான் கல்வியாகிய கடலில் தப்பியும் என்றார்.