பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 245 என்றார் அடிகளார். தெய்வம்பற்றிய எண்ணம், நினைவு என்பவை தோன்றுவது மேல்மனத்தில். மேல்மனத்தின் மேல்பகுதி, கீழ்பகுதி என்ற இரண்டையும் கடந்து அடியில் இருப்பது சித்தம். ஆதலால் அந்தச் சித்தத்தைக் கட்டியாளும் ஆற்றல் பெரும்பாலானவர்க்கு இல்லை என்பதும் தெளிவு. எனவே, சித்தத்தில் இறையுணர்வு தோன்ற வேண்டுமேயானால் அது பயிற்சியினாலோ அல்லது வாலாயமாகச் செய்யும் செயல்களினாலோ நடைபெறுவதில்லை. அதற்குப் பதிலாக மேல்மனம் கீழ் மனம் ஆகிய அனைத்திலும் இறையுணர்வு நிரம்பி வேறுநினைவே இல்லாமல் வாழத் தொடங்கும்பொழுது இந்த இறையுணர்வு கொஞ்சம் கொஞ்சமாகச் சித்தத்தில் இறங்கத் தொடங்குகிறது. இறையுணர்வு சித்தத்தில் தானாக நிரம்பவேண்டுமே தவிர, நம்முயற்சியால் நிரப்ப முடியாது. இதுகருதியே உண்டாக்கி’ என்று கூறாமல் 'உண்டாகி’ என்று தன்வினையால் கூறினார். சித்தத்தில் இறங்கிவிட்ட ஒன்றை எளிதாக அசைக்கவோ, போக்கவோ முடியாது. ஆனால், மனத்தில் தோன்றும் ஒன்றை மிக எளிதாகப் போக்கிவிட முடியும். இந்த ஆழமான கருத்தை மனத்திற்கொண்டுதான் தெய்வம் என்பதோர் நினைவுண்டாகி என்றோ, எண்ணமுண்டாகி என்றோ, கருத்துண்டாகி என்றோ கூறாமல் சித்த முண்டர்கி’ என்கிறார் அடிகளார். மனத்தில் தோன்றுவதை எண்ணம்’ என்றும், சித்தத்தில் தோன்று வதைச் ‘சிந்தனை என்றும் கூறலாம். தெய்வம் என்பது ஓர் சிந்தனை என்று கூறாமல் சித்தமுண்டாகி’ என்று கூறுவதால் அந்தச் சித்தத்தில் வேறு ஒரு சிந்தனைக்கும் இடமில்லாமல் சித்தம் முழுவதும் இறையுணர்விற்கே இடமாயிற்று என்பது பெறப்படும். இவற்றை எல்லாம் மனத்திற்கொண்டே 'சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்” (திருமுறை : 7-39-10) என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் கூறிப் போனார்.