பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 247 எனவே இவர்களிலிருந்து இறைவனைப் பிரித்துக்காட்டவே முனிவிலாதது ஓர் பொருள் என்றார் அடிகளார். - ஆன்மீக வழியில் முன்னேறிச் செல்பவர்கள் எந்த நிலையிலும் தாம் நினைத்ததை அடைந்துவிட்டதாகத் திருப்தி அடைய முடியாது; அடையக் கூடாது. விசுவாமித்திரன் கதைமுதல் பலகதைகள் இதற்குச் சான்று பகர்கின்றன. விளையாட்டில் பயன்படுத்தப்படும்'பரமபதப் படத்தில் எல்லாக் கட்டங்களையும் கடந்து பரமபதத்தில் நுழையப்போகும் தறுவாயில், ஒரு பாம்பின் வாயில் விழுந்து புறப்பட்ட இடத்திற்கே வந்துசேரும் காயின் நிலையைப் பலரும் அறிவர். ஆன்மீக வாழ்விலும் இதுவே உண்மை. பொறிபுலன்களை அடக்கி, ஒடுக்கி ஒருமுகப் படுத்திவிட்டதாகக் கருதிக்கொள்ளும் பலரை, அடக்கப் பட்ட இப்பொறிகள் விஸ்வரூபம் எடுத்து எதிர்பாராத நேரத்தில் படுகுழியில் தள்ளும் இயல்பை நாள்தோறும் நாம் கண்டுவருகிறோம். இது கருதியே வள்ளுவப் பேராசான் துறவு என்ற அதிகாரத்தின் பின்னர் அவா அறுத்தல்' என்ற அதிகாரத்தை வைத்துள்ளார். குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் அவா அறுத்தல் அதிகாரத்திற்கு எழுதிய முன்னுரை இங்குச் சிந்திக்கப்பட வேண்டும். 'விடவேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு' என்று கூறுவதன் மூலம் துறவு என்பது எல்லாவற்றையும் துறத்தலாகும் என்ற பொருளைப் பெறவைத்தார். இதன் பின்னர், அவா அறுத்தல் என்ற அதிகாரத்தை வைத்தது, கூறியது கூறலா? என்று நினைப்பவரை நோக்கிப் பரிமேலழகர் மிக அற்புதமாக ஒரு கருத்தைக் கூறுகின்றார். எல்லாவற்றையும் விட்ட துறவிகட்கும் பழைய வினை வயத்தால் ஒரோவழி புலன்கள்மேற் பற்றுச் செல்லுமன்றே. அதனையும் அறிந்து பரிகரித்தற்கு துறவின்பின் அவா அறுத்தலை வைத்தார் என்றார் பரிமேலழகர்.