பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 திருவாசகம் - சில சிந்தனைகள் சூதாடுபவர்கள், பெருங்குடியர்கள், காமுகர்கள் போன்றவர் பலரும் ‘என்றைக்கு வேண்டுமானாலும் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என்று கூறிவிட்டுத்தான் தம் தீயதொழிலைத் தொடங்குகின்றனர். அவர்கள் அறிவை மயக்கும் இவற்றையே மாயா சத்திகள்’ என்கிறார் அடிகளார். சித்தத்தில் இறையுணர்வு நிறைந்த பின்னரும் ஆபத்துக்கள் நீங்கிவிடவில்லை. காரணம், மனிதன் ஒரு சமுதாயப் பிராணி. எனவே, சமுதாயத் தாக்கங்களிலிருந்து விடுபட்டுநிற்றல் ஏறத்தாழ இயலாத காரியம். தெய்வம் என்பதோர் சித்தமுண்டாகி, முனிவிலாத அப்பொருளைக் கருதத் தொடங்கியவுடன் ஒருவனுடைய வாழ்க்கையிலும் சில மாறுதல்கள் தோன்றத்தான் செய்யும். அவன் சித்தத்தை நிரப்பியிருக்கின்ற பொருள் விருப்பு, வெறுப்பு அற்ற பொருளாதலின், இவனுடைய வாழ்க்கையிலும் கொஞ்சங் கொஞ்சமாக விருப்பு வெறுப்பு நீங்கிய நடுநிலமை தோன்றும். இதனைக்கண்ட சுற்றத்தார், அன்புடையார் இவனை இடித்துக்கூறத் தொடங்குவர். இவ்வளவு பெரிய குடும்பத்தையும் செல்வத்தையும் வைத்துப் பராமரிக்க வேண்டிய நீ. இவற்றில் பற்று வைக்காமல் விட்டேத்தியாக இருப்பது முறையா? உன் கடமைகளிலிருந்து தவறுவது முறையா? நீ நம்புகின்ற கடவுள் எங்கள் குடும்பப் பிரச்சினைகளுக்கு விடை கூறுவரா? ஆகவே இப்போது கடவுளை விட்டுவிட்டு உன் பொறுப்புக்களைக் கவனி. இச்செல்வத்தை அனுபவிக்க வேண்டிய காலத்தில் ஒன்றிலும் பற்றில்லாமல் உன் வாழ்வையே வீணாக்கிக் கொள்ளுகிறாய்” என்றெல்லாம் உபதேசம் செய்யத் தொடங்குவர். இதனையே அடிகளார் நாத்தழும்பேற நாத்திகம் பேசினர் என்று கூறுகின்றார். சுற்றம் என்னும் தொல்பகக் குழாங்கள் பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்