பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 திருவாசகம் - சில சிந்தனைகள் மிண்டிய மாயா வாதம் என்னும் - சண்ட மாருதம் சுழித்து அடித்து ஆர்த்து உலோகாயதன் எனும் ஒள்திறல் பாம்பின் கலா பேதத்த கடுவிடம் எய்தி அதில்பெரு மாயை எனைப்பல சூழவும் (54–58) திருவாதவூரர் தோன்றுவதற்குச் சில ஆண்டுகள் முன்னரே ஆதிசங்கர பகவத்பாதர் தோன்றி மறைந்தார். பிரமசூத்திரம், சில உபநிடதங்கள், கீதை ஆகியவற்றை அடிப்படையாக வைத்துக்கொண்டு 'அத்வைதக் கொள்கையை நிலைநிறுத்தினார். பிரமம் என்று சொல்லப் படும் ஒன்றைத்தவிர ஏனைய அனைத்தும் மாயை என்பது அவருடைய வாதம். சைவர் முதலானவர்கள் சொல்லும் அசுத்தமாயை, சுத்தமாயை என்பவற்றிலிருந்து பெரிதும் மாறுபட்டிருப்பது சங்கரர் கூறும் மாயை. அதை முழுதும் விளக்கமுடியாது என்ற கருத்தில் 'அனிர்வசனியம்’ என்று அதற்குப் பெயரிட்டார். சேரநாட்டில் உள்ள காலடி என்ற ஊரில் தோன்றிய அவர், இந்தியாவின் பல இடங் களையும் சுற்றி அத்வைத சமயத்தை நிறுவி, நான்கு இடங்களில் தம்முடைய மடத்தையும் நிறுவினார். மண்டனமிளிரர்போன்ற பெருங் கல்விமான்களையும் தோற்கடித்து, புயல் வேகத்தில் தம்முடைய கொள்கையைப் பரப்பினார். ஆறாம் நூற்றாண்டுமுதல் பக்தி இயக்கத்தில் மூழ்கி இருந்த தமிழகத்தில் சங்கரருடைய அத்வைதம் கால் கொள்ளவில்லை. சங்கரரும் தமிழ்நாட்டிற்கு வரவே இல்லை. புத்த சமயத்தை எதிர்ப்பதற்காகவே தருக்க சாத்திரத்தை நன்கு பயன்படுத்திய சங்கரருடைய கொள்கை சைவம், வைணவம்போன்ற நிலையான சமயங்கள் அதிகம் பரவாதிருந்த வடநாட்டில் பிரபலம் அடைந்தது.