பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 253 சங்கரருடைய கொள்கையை ஏற்காதவர்கள்கூட அவருடைய தருக்கவாதத்தில் ஈடுபட்டு மயங்கினர். அதனையே அடிகளார் மிண்டிய’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். சங்கரர் கொள்கை முற்றிலும் அறிவின் அடிப்படையில் தோன்றியதால் உயர்ந்த அறிவுடையோர் மட்டுமே அதனை ஒரளவு புரிந்துகொள்ள முடிந்தது. ஏனையோரைப் பொறுத்தமட்டில் அதனைப் புரிந்து கொள்ள முடியாவிடினும் அறிவு ஜீவிகள் கூட்டத்தில் தாங்களும் சேர்ந்துவிட்டதாகக் கருதி இறுமாத்தனர். மேலும், பிரமத்தைத் தவிர ஏனைய அனைத்தும் மித்தை' என்ற வாதம் சாதாரண மக்களை மிகவும் கவர்ந்தது. எல்லாவற்றையும் பொய் என்று கூறுவது மிக எளிதான ஒன்று. ஒன்றை மெய் என்று கூறும்பொழுதுதான் காரணகாரியம் காட்டி அதை நிறுவவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அன்றியும் வடநாட்டில், வேத அடிப்படையில் தொடங்கிய யாகம் முதலிய சடங்குகள் அளவுக்கு அதிகமாகச் செய்யப் பட்டமையின் மக்களிடையே ஒரு சோர்வை உண்டாக்கியிருந்தன. அத்தகைய மனநிலையில் உள்ளவர்களை தருக்கரீதியாக எழுந்த அத்வைதம் மிகவும் கவர்ந்தது. இக்காரணங்களால் சங்கரர் கொள்கை வட நாட்டில் அதிகம் பரவலாயிற்று. இதனையே அடிகளார் சண்ட மாருதம் சுழித்தடித்து ஆர்த்து’ என்று கூறுகிறார். அடுத்தபடியாக மக்களை எளிதில் பற்றுகின்ற கொள்கை உலகாயதமாகும். காட்சிப் பிரமாணத்தில் அகப்படுகின்ற இப்பிரபஞ்சத்தைத் தவிர ஏனைய எல்லாம் பொய்யான கற்பனை, கடவுள் என்ற பொருளும் மனிதனுடைய கற்பனையே தவிர வேறொன்றுமில்லை என்று கூறுவது உலகாயதம். உலகாயதம் என்ற இந்தச் சொல்லை இக்காலத்தார் பொருள்முதல் வாதம் என்று கூறுவர். அதை வரலாற்றுப் பொருள்முதல் வாதம், தருக்கமுறைப் பொருள்முதல் வாதம் என்றெல்லாம்