பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சிவபுராணம் சிந்தனைகள் நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க (1–2) திருவாசகத்திலுள்ள ஏனைய பகுதிகளுக்கு இன்று காணப்பெறும் தலைப்புகளை மணிவாசக அடிகளாரே தந்தாரா என்பது சிந்தனைக்குரியது. ஆனால், சிவபுராணம் என்ற தலைப்புடன் காணப்பெறும் முதல் அகவற்பாவுக்கு அடிகளாரே அத்தலைப்பைத் தந்துள்ளார் என்று நினைக்க வேண்டியுள்ளது. இந்த அகவலின் இடைப் பகுதியில், சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை முந்தை வினை முழுதும் ஒய, உரைப்பன் யான் - (19–20) என்று பாடியிருத்தலின் அடிக்ளாரே இத்தலைப்பைத் தந்திருக்க வேண்டுமென்று நினைப்பதில் தவறு இல்லை. புராணம் என்ற வடசொல் பழைய நிகழ்ச்சிகளைக் குறிக்கும். தோற்றம், இறுதி இல்லாதவன் ஆகிய பெருமானுக்குப் பழமை, புதுமை என்ற வேறுபாடு இல்லையாயினும், இன்று அவனைப்பற்றிப் பாடத் தொடங்குகின்ற அடிகளாருக்கு முன் நிகழ்ந்தவை பழமை என்றே தோன்றுகிறது. ஆகவே “சிவபுராணம்’ என்கிற போது சிவனது அநாதியான பழமை கூறும் பகுதி என்று பொருள் கொள்வதில் தவறு இல்லை. சிவபுராணம் தொடங்குகின்ற முதல் இரண்டு அடிகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவையாகும்.