பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 271 கூறினமையின் பிறவி உள்பட எல்லாத் துயரங்களையும் களைபவன் என்றாராயிற்று. - 'உடையாய் போற்றி உணர்வே போற்றி என்ற அடியில் உடையாய் என்பது உயிர்களை அடிமைகளாக உடைய தலைவன் என்று பொருள்படும். 'உணர்வே' என்பது சித்தத்தின் அடிப்பாகத்தில் தோன்றும் அன்பு முதலிய உணர்வைக் குறிப்பதாகும். உணர்வு வடிவானவன் என்பதால் அன்பு வடிவானவன் என்ற பொருளும் பெறப்படும். இதுகருதியே திருமூலர், அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் (திருமந்திரம்:270) என்று கூறிப் போயினார். ஐயா போற்றி அணுவே போற்றி சைவா போற்றி தலைவா போற்றி குறியே போற்றி குணமே போற்றி நெறியே போற்றி நினைவே போற்றி {112–115) 'ஐ வியப்பாகும்’ என்ற தொல்காப்பியச் சூத்திரத்தின் அடிப்படையில் தோன்றியது 'ஐயா போற்றி என்ற தொடராகும். இங்கு ஐயா என்று அடிகளார் குறிப்பிடுவது இறைவனது கடந்து நிற்கும் நிலைபற்றித் தோன்றிய எண்ணமாகும். இந்த வியப்புச் சொல்லை அடிகளார் பல இடங்களில் இதே கருத்தில் பயன்படுத்தி உள்ளார். இந்த வியப்பு எதனால் தோன்றிற்று என்று சிந்தித்தால் அடுத்துள்ள அணுவே போற்றி என்ற தொடர் அதற்கு விடையாக வரும். இரண்டாவதாக அணுவைக் குறிப்பிட்டதால் ஐயா என்ற வியப்புத் தோன்றக் காரணமாய் இருப்பது அணுவுக்கு நேர்மாறான பேரண்டமாகும். பேரண்டமாய் விரிந்து பரந்து நிற்கின்ற