பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 திருவாசகம் - சில சிந்தனைகள் அழித்தல் ஆகிய இரண்டையும் செய்யக் கூடியவன் அவனென்றால் என்றோ ஒருநாள் இந்த அழித்தற் செயல் அவனைப் பற்றிவிடுமோ என்ற ஐயம் தோன்றலாம். பாம்பின் வாயில் என்றுமுள்ள விடம் பிற உயிரை அழிக்குமேயன்றிப் பாம்பை ஒன்றும் செய்வதில்லை. அதேபோல இவனுடைய அழித்தல் சக்தியும் இவனை ஒன்றும் செய்வதில்லை. பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி (137-141) பஞ்ச பூதங்கள் என்ற பொதுப் பெயரால் வழங்கப் பெறும் ஐந்தையும் வரிசைப்படுத்துகின்றார் அடிகளார். இந்த ஐம்பூதங்கட்கும் இயல்பான சில பண்புகள் உண்டு. அப் பண்புகளைப் புலன்கள் என்ற சொல்லால் குறிப்பிடுவர். இந்த வைப்பு முறையும் ஒரு நுண்மையான கருத்தை உட்கொண்டதாகும். பார் என்ற நிலம், திண்மையானதும் வலிவுடையதும் ஆகிய துகள்களால் ஆனதாகும். இந் நிலத்திற்கு ஐந்து பண்புகள் உண்டென்கிறார் அடிகளார். அவையாவன நாற்றம், சுவை, ஒளி(உரு), ஊறு, ஓசை என்பனவாம். ஒளியென்பது பொருளின் வடிவை அறிய உதவுவதால் ஒளிக்குப் பதிலாக உரு’ என்ற சொல்லை இங்கு பயன்படுத்துகிறோம். இந்த ஐந்து பண்புகளும் நிலத்தில் எங்கும் நிறைந்துள்ளன. நிலத்தை எவ்வளவு சிறிய துண்டாக, சிறுசிறு அணுவாகப் பிரித்தாலும் அந்த ஒவ்வொன்றிற்கும் இந்த ஐந்து பண்பும் உண்டென்பதை மறத்தலாகாது.