பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 திருவாசகம் - சில சிந்தனைகள் அளிபவர் உள்ளத்து அமுதே போற்றி கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி (142-144) 'அளிபவர் உள்ளம் என்று கூறியதால் புறமனம், அகமனம் ஆகியவற்றைக் கடந்துநிற்கும் சித்தத்தைக் கூறினார் என்று அறிதல் வேண்டும். அளிதல் என்பது கணிதல் என்று பொருள்படும். கனிவு மனத்திற்கும் உண்டேனும், அது பிறிதொரு பொருளைக் கண்டவிடத்து இரக்கம் காரணமாகத் தோன்றுவதாகும்; அது சாதாரணக் கனிவாகும்.உள்ளக்கனிவு அவ்வாறன்று. இறைவன்மாட்டுக் கொண்ட பேரன்பு காரணமாகப் பிற பொருளின்றியும் மனம் கனிவு பெற்று, பின்னர் அது உள்ளத்திற் பாய்கின்றது. உள்ளம் கனிவால் நிரம்பிய வழி இறைவன் அங்கே குடிவருகின்றான். அவன் வந்தமை தெரியாது ஆயினும், அதனால் ஏற்பட்ட ஆனந்தம் சித்தம், மனம் ஆகியவற்றில் நிரம்பி வழிந்து ஓடுதலால் அளிபவர் உள்ளத்து அமுது’ என்றார். தேவர்கள் எத்தகையவர் என்று முன்னரே கூறப் பெற்றுள்ளது. 'கனவிலும்’ தேவர்க்கு அரியாய் என்றதனால் நனவில் இறைக்காட்சி பூரணமாகவே இல்லாது போயிற்று. அத்தகைய காட்சி எந்த ஒரு தகுதியும் இல்லாத தமக்கு நனவிலும் கிடைத்தமையை எண்ணி வியக்கிறார் அடிகளார். தேவர்களுக்கு அரிய ஒன்று தமக்கு எளிதாகக் கிடைத்துவிட்டமையின் தேவர்களைவிடத் தாம் உயர்ந்தவர் என்ற தற்புகழ்ச்சி இல்லாதிருக்க நாயேற்கு என்றார். இடைமருது உறையும் எந்தாய் போற்றி சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீர்ஆர் திருவையாறா போற்றி