பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 289 திடீரென்று நீங்கிவிடுமோ? நீங்கினால் என்ன செய்வது? என்பதுபோன்ற அச்சங்களாகும். இந்த அச்சம் நாவரசர், திருவாதவூரர்போன்ற மகான்களுக்கும் இருந்துவந்திருக்கும் போலும், இது கருதியே நாவரசர் பெருமான், துறக்கப்படாத' என்று தொடங்கும் தனித் திருவிருத்தப் பாடலில், பிறப்பன் பிறந்தாற் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன் பேர் மறப்பன்கொலோ என்று என்னுள்ளங் கிடந்து மறுகிடுமே (திருமுறை: 4-113-8) என்று பாடியுள்ளார். மணிவாசகருங்கூட அருளாது ஒழிந்தால் அடியேனை அஞ்சேல் என்பார் யார் இங்கு” (திருவாச 21-8) என்றும் பவளத்திருவாயால் அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் கண்டாய்” (திருவாச:25-10) என்றும் பாடியுள்ளமை இங்கு நோக்கத் தக்கது. இவ்வாறு அஞ்சேல் என்று இறைவன் கூறவேண்டுமேயானால் அதற்குரிய தகுதி தம்பாலில்லை என்பதை உணர்ந்த அடிகளார் அஞ்சேல் என்று இங்கு அருளாய்” என்றார். 'இங்கு அருளாய்' என்றதும் சிந்திக்கத் தக்கது. இவ் உடலைத் துறந்து செல்லும் உயிரை நோக்கி அஞ்சேல் என்று இறைவன் கூறினால், இவ்வுடலோடு இருக்கும் பொழுது தோன்றும் அச்சத்தைத் தவிர்க்க அச்சொல் பயன்படாது. ஆதலின், இங்கு' அதாவது இந்த விநாடியே, இந்த இடத்திலேயே என்னை அஞ்சேல் என்று அருளாய்” என்று கூறியருளினார். - இப்பிறப்பில் இவ்வுடம்போடு இருக்கும்பொழுதே குருவடிவில் வந்த இறைவன் அவரைத் தொட்டு ஆசி வழங்கிவிட்டான். இறை அனுபவத்தை முழுவதுமாகப் பெற்ற பின்னர், பாடிய பாடல்கள் இவை ஆதலின், திருவாசகத்தில் வரும் ஒவ்வொரு சொல்லும் நம்முடைய வாழ்க்கைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காய் அமைந்திருத்தலை அறிதல் வேண்டும்.