பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 299 நானிலம் புகாமல் பரகதி பாண்டியற்கு அருளினை போற்றி என்று இரண்டு முழு அடிகளில் பாடுவாரே யானால் அவனுடைய பெருமை எத்தகையது என்பதை ஒருவாறு விளங்கிக்கொள்ள முடியும். தாயுமானவப் பெருந்தகை கூறுவதுபோல அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்துள்ள அப் பரம்பொருளை ஒழிவு அற நிறைந்த' என்ற சொற்களால் குறிப்பிடுகின்றார். ஒழிவு அற' என்றால் ஏதோ ஒன்றில் நிறையாமல் விட்டுப்போயிற்று என்று கூறமுடியாதபடி, எல்லாவற்றிலும் நிறைந்துள்ளது என்பது பொருளாகும். வளப்பம் பொருந்திய மலரைப் போன்றுள்ள சிவபுரம் என்பதன் நோக்கம் ஒன்றுண்டு. எங்கோ திரிகின்ற வண்டை, தம் நிறத்தாலும், மணத்தாலும் கூவியழைத்துத் தம்மிடம் வந்து தேன் உண்ணும்படி செய்கின்ற மலர்கள் சிவபுரத்திற்கு உவமையானது பொருத்தமே. அல்லற்பட்டு, செல்லுமிடம் தெரியாமல் திகைத்து வாடுகின்ற உயிர்களை தன்னிடம் வந்து சேருமாறு சிவபுரம் அழைப்பதாகலின் செழுமலர்ச் சிவபுரம் என்றார். மையல் என்பது உயிரோடு பிறந்த பிறவிக்குணமாகும். விலங்குகள் பகுத்தறிவின்மையால் பொருள்களைக் கண்டு மயங்குகின்றன. பகுத்தறிவுடைய மனிதனுக்கு அவனுடைய அறிவே மயக்கத்தை உண்டாக்குதலின் எதுஉண்மை என்று தெரியாமல் மயங்கிநிற்கும் நிலை ஏற்படுகிறது. அறிவின் துணைக்கொண்டு மெய்ம்மை என்று இன்று அறியப் பட்டவை, அறிவு வளர்ந்த காலத்தில் பொய்ம்மையாக மாறிவிடுகின்றன. எனவே, மயக்கம் என்பது இறுதிவரை மனித அறிவிற்கு ஒரு சவாலாகும். அதைப் போக்க வேண்டுமானால் இறைவன் திருவடிகளைச் சரணடைவது ஒன்றே வழியாகும். இதனைக் கருத்திற்கொண்டே 'தொழுவார் மையல் துணிப்பாய்’ என்றார். துணித்தல் என்ற சொல்லைப் பயன்படுத்தியதன் நோக்கம், மேலும்