பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போற்றித் திருஅகவல் - சிந்தனைகள் 301 வாட்டம் இலா மாணிக்க வாசக நின் வாசகத்தைக் கேட்டபொழுது அங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும் வேட்டம் உறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான நாட்டம் உறும் என்னில் இங்கு நான்அடைதல் வியப்பன்றே (திருவருட்பா:5-12-10) என்று பாடுகின்றார். திருவாசகத்தின் தொடக்கத்திலுள்ள நான்கு அகவல்களில் நான்காவதாக அமைந்துள்ளது போற்றித் திருஅகவல் ஆகும். மொத்தம் 225 அடிகளுள்ள இந்த அகவலில் ஏறத்தாழ 140 அடிகள் போற்றி என்று முடிவதால் இவ் அகவலின் பெயரையே போற்றித் திருஅகவல் என்று கூறினர் நம்முன்னோர். இந்த அகவலின் தனிச்சிறப்பு, ஒர் ஆன்மாவின் யாத்திரையை விரிவாகக் கூறுவதே ஆகும். முதல் பத்து அடிகளில் இறைவனுடைய பெருமையைக் கூறுகிறார். அவ்வளவு கூறிய பின்னர் இத்துணைப் பெரியவன் தமக்கு உதவுவானோ? அவனை நெருங்க முடியுமோ என்று ஐயுறுவார்க்கு அமைதி கூறுவதுபோல ஆன்ம வளர்ச்சிமுறையில் இரண்டு கட்டங்களை எடுத்துப் பேசுகின்றார். 'தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகிவிட்டது (42) என்ற நிலை வரும்போதுகூடப் பல்வேறு வகையான தடைகள் எதிர்வருகின்றன என்பதை வரிசைப்படுத்திக் காட்டி இறுதியாக ஒரு வழியைக் கூறுகின்றார். அடுத்து, அறிவின் துணைக்கொண்டு இறைவனை அறியவோ, அணுகவோ முடியாது என்பதைக் குறிப்பாகக் காட்டிய பின்னர், அன்புவழி ஒன்றே அவனிடம் கொண்டுசேர்க்கும் என்பதைக் கூறுவார்போல ‘அகங்குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்து'(67) என்று தொடங்கி அவ்வழியின் சிறப்பைப் பேசுகின்றார். -